Last Updated : 27 Feb, 2020 01:17 PM

 

Published : 27 Feb 2020 01:17 PM
Last Updated : 27 Feb 2020 01:17 PM

தமிழகத்தில் எதிர்ப்புப் பிரச்சாரமே அதிகம்; வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்: தமிழிசை பேச்சு

மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

இந்தியா -தென்கிழக்கு ஆசிய நாடுகளுகளுக்கு இடையிலான கடல் சார்ந்த பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டும் சர்வதேச கருத்தரங்கை இன்று (பிப்.27) புதுச்சேரியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கலாச்சார, வர்த்தகத் தொடர்புகள் பழங்காலம் தொட்டே இருந்துவந்தது. ஆனால், வரலாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதனை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியம். தமிழகத்திலும் தவறான தகவல் தொடர்பு காரணமாக வரலாறு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாறு நிறைய மறைக்கப்பட்டுள்ளது.

கடல் கடந்த தமிழர் பெருமைக்குச் சான்றாக மகாராஷ்டிர துறைமுகத்துக்கு, ராஜேந்திர சோழனுக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலோ எதிர்ப்புப் பிரச்சாரமே அதிகம். மறைக்கப்பட்ட இந்திய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியம்" என தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசுகையில், "புதுச்சேரிக்கு ரோமானியார்கள், பிரெஞ்சுக்காரர்கள் என பல நாட்டவர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. பழங்காலத்தில் புதுச்சேரியில் இருந்த சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். கடல் வாணிபச் சான்றாக உள்ள அரிக்கன்மேட்டில் மியூசியம் அமைக்கப்படுகிறது. அத்துடன் கோயில் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் தருகிறோம்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி சுனில் லன்பா உள்ளிட்டோர் பேசினர். இம்மாநாடு இன்று தொடங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x