Published : 11 Aug 2015 08:34 PM
Last Updated : 11 Aug 2015 08:34 PM

டார்னியர் விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளுக்கு முப்படை சார்பில் இறுதி அஞ்சலி

டார்னியர் விமான விபத்தில் உயிரிழந்த மூன்று விமானிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை)முப்படை சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான டார்னியர் ரக ‛சிஜி-791’ என்ற விமானம் கடந்த ஜூன் 8-ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிதம்பரம் அருகே கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் வித்யாசாகர், சுபாஷ் சுரேஷ், மற்றும் சோனி ஆகிய மூன்று விமானிகள் பயணம் செய்தனர். 36 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் பிச்சாவரம் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் சில மனித எலும்புகளும் கிடைத்தன.

அந்த எலும்புகள் விமானத்தில் பயணம் செய்த விமானிகளுடையதா என்பதைக் கண்டறிய அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து ரத்த மாதிரி எடுத்து மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவை விமானிகளின் உடல் பாகங்கள் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 விமானிகளும் உயிரிழந்து விட்டதாக கடலோர காவல்படை அறிவித்தது.

இறந்த விமானிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பரங்கிமலையில் உள்ள கடலோர காவல்படை விமான தளத்தில் இன்று நடைபெற்றது. கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. சர்மா, தென் பிராந்திய ராணுவ தளபதி (பொறுப்பு) ஜக்பீர் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சி.சைலேந்திர பாபு உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இறந்த விமானிகளான சுபாஷ் சுரேஷ், சோனி ஆகியோரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். வித்யாசாகரின் குடும்பத்தினர் வரவில்லை. மீட்கப்பட்ட விமானிகளின் உடல் பாகங்கள் மற்றும் அவர்களது உடமைகள் இந்நிகழ்ச்சியின்போது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

இறந்த விமானிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x