

சிஏஏவுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள், அவர்கள் கேள்விக்குப் பதிலளிக்க உங்களுக்கு திராணியில்லை. பாஜகவிடம் அதற்கான பதிலும் இல்லை. அதனால்தான் பதில் தராமல் திசைதிருப்ப இதுபோன்ற போராட்டத்தைத் தூண்டுகிறார்கள் என்று குஷ்பு காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“சிஏஏவைப் பொறுத்தவரை மக்களுக்குப் புரியவில்லை. அதனால்தான் போராடுகிறார்கள் என பாஜக சொல்கிறது. ஆனால் மக்களுக்குப் புரியவைக்கும் எந்த முயற்சியையும் பாஜக எடுக்கவில்லை. மிகப் பெரிய கலவரம் டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதுதான் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம் என்று சொல்கிறார்கள்.
ட்ரம்ப் வந்துள்ளார். அதனால்தான் நாங்கள் பிஸியாக இருந்தோம் என்று சொல்கிறார்கள். எனக்குப் புரியவில்லை. இந்த நாட்டில் ஒரு பிரச்சினை என்றால் அதைத்தான் அவர்கள் முதலில் கவனிக்க வேண்டும். ட்ரம்ப் வருகிறார் என்றால் அவரைக் கவனிக்க பலர் இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர் நிச்சயமாக இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டிருக்க வேண்டும்.
டெல்லியில் கலவரம் நடக்கிறது. கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடக்கிறது. ஆனால், பிடிவாதமாக இதிலிருந்து பின்வாங்காமல் இருக்கிறார்கள்.
இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்ஆர்சி பற்றி நாங்கள் பேசவில்லை என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் அமித் ஷா நாடாளுமன்றத்திலும் சரி, வெளியில் பேசும்போதும் சரி என்ஆர்சி நாடு முழுவதும் வந்தே தீரும் என்கிறார். இந்த விஷயத்தில் பிரமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் இரண்டுவிதக் கருத்துகள் உள்ளன.
இதில் யார் உண்மை சொல்கிறார்? யார் பொய் சொல்கிறார் என்று தெரியவில்லை. மக்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். கேள்விகள் வரும்போது அதற்கு பதிலும் சொல்வதில்லை. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஒரு கேள்விக்கும் நீங்கள் பதிலளித்தது இல்லை. இப்பவும் அதேபோல் இருந்தால் என்ன அர்த்தம்?
மக்கள் கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல வேண்டும். மக்களுக்காக வேலை பார்க்க உங்களைத் தேர்வு செய்தபோது மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தெரியவில்லை என்றால், என்ன அரசு நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. நாடு முழுவதும் மதரீதியாகப் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. நீண்ட ஆண்டுகளாக நாட்டில் மதக் கலவரம் இல்லை. ஆனால், மறுபடியும் மதரீதியாக பிரச்சினை ஆரம்பித்துள்ளது.
பயமுறுத்துவதற்காக பிரச்சினைகளை ஆரம்பிக்கின்றனர். பாஜக எம்.பி. கபில் மிஸ்ரா டெல்லியில் பேசும்போது மிரட்டும் வகையில் பேசுகிறார். இதையெல்லாம் தினம் தினம் பார்க்கிறோம். பல்கலைக்கழகங்களில், சாலைகளில், தெருக்களில் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கேள்விக்கு பதில் இல்லை.
ஜேஎன்யூவில் உள்ளே புகுந்து தாக்கிய பெண் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? அதில் ஒருவர் ஏபிவிபி மாணவர். அவர் ஏன் கைது செய்யப்படவில்லை? கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றோர் சுட்டுக்கொல்லுங்கள் என பகிரங்கமாகப் பேசுகின்றனர். அவர்களை ஏன் கைது செய்யவில்லை?
அவர்களைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை. அவர்களுக்கு ஆதரவாக அனைத்தும் நடப்பதால் தைரியமாகப் பேசுகிறார்கள். சட்டம் ஒழுங்கு என்ன ஆனது? டெல்லி போலீஸ் என்ன செய்கிறது? இதைப் பார்க்கும்போது நாடு எந்த திசையில் போகிறது என்று பயம் வருகிறது. அமைதிப் பூங்காவான நாட்டில் ஆங்காங்கே பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்துள்ளன.
விஷத்தை மக்கள் மனதில் மெதுவாக அமிர்தம் மாதிரி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மையில் விஷம். அது நிறுத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினை வரும். இந்தியா அமைதியான நாடு. அனைவருக்கும் சொந்தமான நாடு. இங்கு சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் அமைதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிஏஏவுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். அவர்கள் கேள்விக்குப் பதிலளிக்க உங்களுக்குத் திராணியில்லை. பாஜகவிடம் அதற்கான பதிலும் இல்லை. அதனால்தான் பதில் தராமல் திசை திருப்ப இதுபோன்ற போராட்டத்தைத் தூண்டுகிறார்கள்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அங்கு நடக்கும் சரியான விஷயங்களை பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது வெளியே வரக்கூடாது என்று தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்காக இதுவரை ஒரு சிறு வருத்தம்கூட அவர்கள் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது”.
இவ்வாறு குஷ்பு பேட்டி அளித்தார்.