வேளாண் மண்டலம்: மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தல்; கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால், திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இன்று (பிப்.20) சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை முதல்வர் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு தான் ஒரு விவசாயியாக மகிழ்ச்சியடைவதாகவும், இத்தருணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார்.

'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவில், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களை மசோதாவில் சேர்க்காதது ஏன் என, சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், காவிரி டெல்டாவில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ள விவசாயம் அல்லாத திட்டங்களுக்குத் தடை விதிக்காதது ஏன் எனக் கேள்வியெழுப்பிய ஸ்டாலின், இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை எனவும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால் திருச்சியைச் சேர்க்கவில்லை எனவும் பதிலளித்தார். இதையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்புச் செய்தனர்.

இதன் பின்னர், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in