

அயோத்தியில் பிரமாண்ட ராமர்கோயில் அமைக்க தேவைப்பட்டால் கூடுதல் நிலம் கைப்பற்றப்படும் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி மக்களவையில் அறிவித்தார்.
இந்த அறக்கட்டளையில் மொத்தம் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மொத்தம் 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 7 முழு நேர உறுப்பினர்கள், 5 பேர் நியமன உறுப்பினர்கள், 3 பேர் அறக்கட்டளைதாரர்களாகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் முதல் கூட்டம் நேற்று மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் இல்லத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதில், அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, மகந்த் நிருத்ய கோபால் தாஸ் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கோயில் கட்டுமானக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தநிலையில் நிருத்ய கோபால் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி 6 மாதங்களுக்குள் தொடங்கும். முழுக்க முழுக்க நன்கொடை பெற்று மட்டுமே கோயில் கட்டப்படும். அரசிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெற மாட்டோம். மிக பிரமாண்டமான முறையில் கோயில் கட்ட முடிவு செய்துள்ளோம்.
தேவைப்பட்டால் கூடுதல் நிலம் கையகப்படுத்தப்படும். இதுகுறித்து உ.பி. அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சேகரிக்கப்பட்ட செங்கல்கள் கோயில் கட்டும் பணிக்கு பயன்படுத்தப்படும். தேவைப்பட்டால் மட்டுமே செங்கல்கள் வாங்கப்படும்’’ எனக் கூறினார்.