

மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்புபவர்களையும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களையும் பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு கூறுபவர்கள்தான் அந்நாட்டுக்குச் செல்ல வேண்டும் என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை, லயோலா கல்லூரியின் சமூகப் பணி துறையின் சார்பாக நேற்று (பிப்.18) நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு கனிமொழி பேசினார்.
அப்போது பேசிய கனிமொழி, இந்தியாவில் சிறுபான்மையினர் இந்நாட்டுக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளதாகவும், அவர்கள் சிறுபான்மையினர் அல்ல எனவும் கூறினார்.
மேலும், இது தொடர்பாக கனிமொழி கூறுகையில், "இந்தியாவின் சிறுபான்மையினர் இந்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினர். எல்லோருக்குமான கல்வியைக் கொண்டு வந்தனர். சிறுபான்மையினர் இந்நாட்டுக்காக பலவற்றைச் செய்துள்ளனர். வரலாறு திரித்து எழுதப்படுகிறது. மக்களை நோக்கிச் செல்வது தேசவிரோதமான செயலாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்புபவர்களையும் அநீதிக்கு எதிராக குரல் எழுப்புபவர்களையும் பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு கூறுபவர்கள்தான் அந்நாட்டுக்குச் செல்ல வேண்டும். அவர்களுக்குத்தான் அந்த நாட்டைப் பற்றி அதிகம் தெரியும்.
சில கட்சியில் உள்ள சில தலைவர்கள் தொடர்ந்து பாகிஸ்தான் செல்ல வேண்டுமென்று கூறுகின்றனர். யாருக்காவது இந்நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் எனத் தோன்றினால், தயவுசெய்து செல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் இந்நாட்டுடன் பொருந்தவில்லை. இந்தியாவின் நவீன கருத்தாக்கங்களுடன் நீங்கள் பொருந்தவில்லை, இந்தியா குறித்த பெரியாரின் எண்ணங்களுடன் பொருந்தவில்லை. இந்த நாடு எங்களுக்கானது" எனப் பேசினார்.
மேலும், இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சிகள் நடப்பதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவு வழங்க தனியார் அமைப்புடன் அரசு ஒப்பந்தம் போட்டிருப்பதை விமர்சித்த கனிமொழி, "தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், இப்போது அதனையும் தனியார்மயமாக்குகின்றனர். சித்தாந்த ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்தின் எந்த அரசாங்கமும் இத்திட்டத்தை நிறுத்த நினைத்ததில்லை. அதனை விரிவுபடுத்தவே திட்டமிட்டனர்" எனக் கூறினார்.
தவறவிடாதீர்!