

புதுடெல்லி; டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே குடியரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஜேஎன்யு (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழம்) மாணவர் ஷார்ஜீல் இமாமுக்கு எதிராக டெல்லி போலீஸார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
டெல்லியில் சிஏஏ-வுக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனியில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸாருடன் மோதல் ஏற்பட்டதில், 4 பஸ்கள், 2 போலீஸ் வாகனங்களை போராட்டக்காரர்கள் எரித்தனர். இதில் மாணவர்கள், போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 60 பேர் காயம் அடைந்தனர்.
வன்முறை தொடர்பாக ஜேஎன்யு மாணவர் ஷார்ஜீல் இமாமை தேசதுரோக வழக்கில் டெல்லி போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அவருக்கு எதிராக முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் போராட்டத்தை தூண்டிவிட்டதாக ஷார்ஜீல் இமாம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரங்களாக கண்காணிப்பு கேமரா பதிவுகள், தொலைபேசி உரையாடல்கள், 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.ஷார்ஜீல் இமாமை 1 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அவரை மார்ச் 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க நேற்று உத்தரவிட்டது.