

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இதுதொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது.
காவிரி டெல்டா பகுதிகளில், குறிப்பாக காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களில் பி-2என வகைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்து கேட்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கடந்த பிப்.9-ம் தேதி சேலம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு உயிர் கொடுக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றும் என்றும் அறிவித்தார். அதன்பின், மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரி மத்திய அமைச்சர்களிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து முதல்வர், தலைமைச் செயலர் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன், பல்வேறு துறைகளின்அதிகாரிகள், சட்ட வல்லுநர் களுடனும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை தொடர்பான சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இறுதிநாளில் துணை முதல்வர் பதிலுரையின்போது, சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டு, இறுதியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான சட்டமும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதை முன்னிட்டு, இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், இன்று மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண்மண்டலம் தொடர்பான விதிமுறைகளுக்கு ஒப்புதல் பெறப்படும். குடியுரிமை சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.