Published : 18 Feb 2020 09:35 PM
Last Updated : 18 Feb 2020 09:35 PM

சிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா?- காண்பியுங்கள்; முதல்வர் எடப்பாடி ஆவேசம்: வைரலாகும் காணொலி

முதல்வர் எடப்பாடி இன்று சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசிய பேச்சு காணொலியாக வைரலாகி வருகிறது. சிஏஏ குறித்து மக்களை பதற்றப்படுத்துகிறீர்கள் என்றும் சிஏஏ-வால் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? உங்களால் ஒருவரை காட்ட முடியுமா? என ஆவேசமாக கேட்கும் காணொலி வைரலாகி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மூன்று ஆண்டுகள் முதல்வர் பணியை முடித்து 4 வது ஆண்டில் எடுத்துவைத்துள்ளார். முதல்வராக பல்வேறு விமர்சனங்களை கடந்து 3 ஆண்டுகள் தாக்குப்பிடித்து விட்டாரே என்று பொதுமக்களிடையே பேச்சு உலா வருகிறது. இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கிறது.

நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னர் எங்களை 37 எம்பிக்கள் இருக்கிறீர்களே என்ன செய்கிறீர்கள் எனக்கேள்வி கேட்டீர்களே இப்ப நீங்க 38 பேர் இருக்கிறீர்களே என்ன செய்கிறீர்கள், வேளாண் மண்டலத்தை நீங்கள் பேசி வாங்க வேண்டியதுதானே என திமுகவினரைப்பார்த்து கேள்விக்கேட்டார்.

இன்றும் இதேபோன்று கொறடா சக்ரபாணி விவசாயிகளுக்கான வட்டி சதவீதத்தை மத்திய அரசு உயர்த்தி இருப்பதை கேட்க மாட்டீர்களா என்று கேட்டபோது எழுந்த முதல்வர் எடப்பாடி நீங்கள் இதை ஏன் இங்கு கேட்கிறீர்கள். நீங்களே அங்கு கேட்கலாமே என்று மீண்டும் இன்றும் தெரிவித்தார்.

அதேப்போன்று சிஏஏ குறித்த தீர்மானத்துக்கு அனுமதி கேட்டபோது மறுத்த நிலையில் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பிய திமுக பின்னர் வெளிநடப்பு செய்தது. பின்னர் உள்ளே வந்து அமர்ந்தனர். அப்போது நிதி நிலை அறிக்கைமீது பேசிய திமுக எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் தனது வாதத்தில் மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்கிறீர்கள் மக்களை பாதிக்கும் திட்டங்களையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று பேசினார்.

இதற்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பதிலளித்தனர். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டதில்லை என விளக்கம் அளித்தனர். அப்படியானால் சிஏஏவை மட்டும் ஏன் எதிர்த்து தீர்மானம் போட மறுக்கிறீர்கள் என மனோதங்கராஜ் கேட்டார்.

அப்போது அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருகட்டத்தில் ஆவேசத்தின் உச்சக்கட்டத்துக்கு சென்றார்.

“இதனால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்க சொல்லுங்க நாங்க தீர்வு காணவேண்டும். தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ் மண்ணில் பிறந்திருக்கின்ற எந்த சிறுபான்மை மக்கள் பாதிச்சிருக்காங்க என்று சுட்டிக்காடுங்க. நாங்க அதற்கு பதில் சொல்லுங்க.

அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றி நாடகமாடி, தவறான அவதூறான செய்தியைச் சொல்லி, இன்றைக்கு நல்ல அமைதியாக நல்லபடியாக இருக்கும் தமிழ்நாட்டில் குந்தகம் ஏற்படும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறீர்களே. என்னச்சொல்லுங்க, யார் பாதிச்சிருக்கிறது சொல்லுங்க நான் விளக்கம் சொல்கிறேன்”,

என்று ஆவேசமாக பேசினார்.

அப்போது ஸ்டாலின் அவையில் இல்லை. துரைமுருகன் உள்ளிட்டோர் பதில் எதுவும் சொல்லவில்லை.
இந்த ஆவேசப்பேச்சு தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதிமுகவினர் அதை பகிர்கின்றனர். இதற்கு திமுகவினர் பதிலளிக்கவில்லை என்றாலும் வெளியில் சிலர் பதிலளித்துள்ளனர்.

சட்டம் அமலானால் பாதிப்பு என்பதால்தான் போராடுகிறோம். அமலாவதற்கு முன்னரே யாருக்கு பாதிப்பு காட்டு என்று கேட்பது என்ன வகை நியாயம் என்று சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x