Published : 17 Feb 2020 06:52 AM
Last Updated : 17 Feb 2020 06:52 AM

கோயில் மனையில் குடியிருப்போருக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப புதிய வாடகையை நிர்ணயிக்கும் பணி தொடக்கம்

கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப புதிய வாடகை நிர்ணயம் செய்வதற்கான பணி தொடங்கியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டின்கீழ் தமிழகம் முழுவதும் 44,121 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 22,600 கட்டிடங்களும் 33,665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை 1 லட்சத்து 23,729 குத்தகைதாரர்கள் பயிர் செய்து வருகின்றனர்.

இவற்றுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். கடைசியாக, கடந்த 2016-ம் ஆண்டு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிர்ணயம் தொடர்பான நோட்டீஸ் ஒரு ஆண்டுக்கு பிறகே வாடகைதாரர்களுக்கு சென்று சேர்ந்தது. இதனால், வாடகை தாரர்கள் வாடகையை செலுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது.

வாடகை பாக்கி

இதைதொடர்ந்து, வாடகை பாக்கியை வசூல் செய்யும் பணிகளில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாடகை பாக்கியை நீண்டகாலமாக செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்வதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

நியாய வாடகை நிர்ணயம்

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நியாய வாடகை நிர்ணயம் செய்வது குறித்த முன்மொழிவுடன் நியாய வாடகை குறித்து வாடகைதாரர்களுக்கு அனுப்பிய அறிவிப்பு கடிதம் மற்றும் வாடகைதாரரால் ஆட்சேபனை ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டதற்கான கடிதம் இணைக்கப்பட வேண்டும். தயார் செய்யப்பட்ட நியாய வாடகை கணக்கீட்டு தாளினை உதவி கோட்ட பொறியாளருக்கு சமர்பித்து அதில் அவரின் மேலொப்பத்துடனும் மாவட்ட பதிவாளர் மேலொப்பத்துடனும் இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும்படி செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகள் கிடைத்தவுடன் அவற்றினை ஆராய்ந்து விரைவில் சந்தை மதிப்புக்கு ஏற்ப புதிய நியாய வாடகை நிர்ணயம் செய்யப்படும்.

இவ்வாறு அறநிலையத்துறை அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x