Published : 15 Feb 2020 01:03 PM
Last Updated : 15 Feb 2020 01:03 PM

ரஜினி கேட்பார் பேச்சைக் கேட்டுப் பேசுகிறார்; குழப்பம்தான் ஏற்படுகிறது: பிரேமலதா பேட்டி

ரஜினி சிலர் பேசுவதைக் கேட்டுப் பேசுகிறார். விளக்கம் கேட்டால் பதிலளிப்பதில்லை. இதனால் குழப்பம்தான் மிஞ்சுகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆண்டவனுடன் மட்டுமே கூட்டணி என்று முழங்கி, தேமுதிகவைத் தொடங்கினார் விஜயகாந்த். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் விஜயகாந்த் வாக்கு சதவீதம் 6-க்கும் கீழே இருந்தாலும் பல இடங்களில் அதிமுக தோற்கக் காரணமாக இருந்தார்.

2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட கடும் அதிருப்தி, விஜயகாந்தை அதிமுக பக்கம் தள்ளியது. ஆண்டவனுடனுடம் மக்களுடனும்தான் கூட்டணி என்று சொன்னவர் அதிலிருந்து இறங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். முதன்முறையாக 29 எம்.எல்.ஏக்களை தேமுதிக பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.

குறுகிய காலத்திலேயே அதிமுகவுடன் மோதலில் ஈடுபட்டதால் கூட்டணி முறிந்தது. தேமுதிகவை பல வகைகளில் நீர்த்துப்போகச்செய்யும் முயற்சிகளை இரண்டு பெரிய கட்சிகளும் மேற்கொண்டன. பலர் கட்சி தாவினார்கள். பின்னர் 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்ததால் திமுகவின் தோல்விக்கு தேமுதிக ஒரு காரணமாக அமைந்தது.

இரண்டு கழகங்களையும் கடுமையாக எதிர்த்து வந்த தேமுதிக கடந்த மக்களவைத் தேர்தலில் திடீரென அதிமுக கூட்டணியில் சேர்ந்ததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது. அவ்வப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேமுதிக கருத்து தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் பேசிய பிரேமலதா, ''குட்டக்குட்ட குனிய மாட்டோம், கூட்டணி தர்மத்திற்காகப் பார்க்கிறோம்'' எனப் பேசியது சர்ச்சையை கிளப்பியது. பாமகவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தேமுதிகவுக்கு இல்லை என்கிற கருத்து தேமுதிகவுக்குள் உள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் நடந்தால் ரஜினியுடன் கூட்டணியில் தேமுதிக, பாமக இணைய வாய்ப்புள்ளது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் அளித்த பேட்டியில் மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.

அவரது பேட்டியில் ரஜினி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:

“ரஜினி சார் மீது நாங்கள் மிக மிக மரியாதை வைத்திருக்கிறோம். விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் அவர். எங்களுக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. அரசியலில் எப்படி இருப்பார், அவர் வருவாரா , இல்லையா? வந்தால் அவருடன் கூட்டணி வைப்போமா? என்கிற கேள்விக்கு இப்போது எங்களிடம் பதில் இல்லை.

முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். ஏனென்றால் இப்போதைக்கு அவர் நடிகர் மட்டுமே. அதனால் இந்தக் கேள்விக்கே இப்போதைக்கு இடமில்லை. அரசியல்வாதியாக ரஜினி எப்படி இருப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ரஜினி சொல்கிற கருத்துகள், அரசியல் ரீதியான கருத்துகள் அவரின் சொந்தக் கருத்தா? என்பதைவிட யாரோ சொல்கிறார்கள், அதை அவர் சொல்கிறார். அதற்கான விளக்கத்தை திருப்பிக் கேட்கும்போது அதற்கான முழு விளக்கத்தையும் அவர் சொல்வது கிடையாது.

இது என்ன ஆகிறது என்றால், அதுகுறித்து மற்றவர்கள் பேசிப்பேசி பெரிதாகிக்கொண்டே போகிறதே தவிர இதற்கான தீர்வு என்ன என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்” என்றார் பிரேமலதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x