தமிழக பட்ஜெட் 2020: 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு; ஓபிஎஸ் அறிவிப்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்
Updated on
3 min read

2020-2021 தமிழக பட்ஜெட்டில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

இதில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

1. நாட்டிலேயே சுகாதாரத் துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் விளைவாக, 2010 ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 24 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம், 2017 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு 16 ஆகக் குறைந்துள்ளது. மாநில அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2010-2012 ஆம் ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் உயிர் பிறப்புகளுக்கு 90 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம், 2015-2017 ஆம் ஆண்டு காலத்தில் 63 ஆகக் குறைந்து, 2019 ஆம் ஆண்டில் இது மேலும் 57 ஆகக் குறைந்துள்ளது. நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்கு 2030 இன் படி, ஒரு லட்சம் உயிர் பிறப்புகளுக்கு தாய்மார்களின் இறப்பு விகிதம் 70 என்ற இலக்கு பல ஆண்டுகளுக்கு முன்கூட்டியே எய்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது, இத்திட்டத்தின் வெற்றியைச் சுட்டிக்காட்டுகிறது. இதில், 65 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 60.64 லட்சம் ஏழை கர்ப்பிணித் தாய்மார்கள் 6,033.81 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர். மத்திய அரசின் மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டமான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம், மாநில அரசின் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் மத்திய அரசிடமிருந்து 23.10 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினைச் செயல்படுத்த 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 959.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்நாடு அரசின் பொது சுகாதார முறையின் மூலமாக, தொடக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ சேவைகளைத் தரமாக வழங்குவதில் தமிழ்நாடு பெருமிதம் கொள்கிறது. மாநிலத்தில் உள்ள ஆரம்பம் மற்றும் இரண்டாம் நிலை சுகாதார நிலையங்களுக்கான வசதிகளை இந்த அரசு தொடர்ந்து வலுப்படுத்தும். அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக தொற்றா நோய்களின் மேலாண்மையை வலுப்படுத்தவும், ஏற்றத்தாழ்வின்றி, சமமான தாய்-சேய் சுகாதார சேவைகளை வழங்கவும், 2,857 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக, 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 260.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. வேகமாகப் பரவி 25 நாடுகளைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் தொற்றுநோயை ஒரு சர்வதேச பொது சுகாதார நெருக்கடி நிலை என்று உலக சுகாதார மைய அமைப்பு அறிவித்துள்ளது. தேசிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பின்பற்றி, நோய்க் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முகமூடி மற்றும் மூன்று அடுக்கு முகமூடிகளை அரசு கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துள்ளது. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியுதவிகள் வழங்கப்படும்.

5. தரமான உயர்நிலை மருத்துவ சிகிச்சைகளை அனைத்துப் பிரிவு மக்களும் சமமாகப் பெறவேண்டும் என்பதற்காக, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை இந்த அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், 1.59 கோடி குடும்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், திட்டம் தொடங்கப்பட்ட 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை, 41.12 லட்சம் பயனாளிகள் 6,601.59 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள் 2,453.22 கோடி ரூபாய் பெற்று, அதைக்கொண்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, காப்பீட்டுத்தொகை ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக 1,033.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

6. தரமான தமிழ்நாட்டு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதற்கான முக்கியக் காரணம் ஆவர். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவாகும். முதல்வரின் தளராத முயற்சிகளின் விளைவாக, முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளை 3,575 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவிட மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி பெற்றுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்றுக்கொண்டு, அது, கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.

7. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், மொத்தம் 1,634 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், நகர்ப்புறங்களில் உள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 10 மாவட்ட மற்றும் மாவட்ட துணை மருத்துவமனைகளுக்கு கட்டிடங்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் வழங்கப்படும். இதற்கென 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 510.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

8. 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 15 ஆயிரத்து 863.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in