Published : 14 Feb 2020 12:10 PM
Last Updated : 14 Feb 2020 12:10 PM

தமிழக பட்ஜெட்: காவிரி - குண்டாறு திட்டத்துக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு; புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல் கட்ட நிதியாக ரூ.700 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கனமழையின்போது காவிரியில் கரைபுரண்டு கடலுக்குச் செல்லும் உபரி நீரை வறட்சியான தென் தமிழகத்துக்குத் திருப்பி விடவேண்டும் என தென்மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். நீண்டகாலமாக நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் இதற்காக குரல் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டருக்கு கால்வாய் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

இத்திட்டம் குறித்து நீர்வள ஆதாரத்துறையின் உதவிப் பொறியாளர் உமாசங்கர் கூறியதாவது:

"119 கிலோ மீட்டருக்கு கால்வாய், பாலங்கள் அமைக்க ரூ.7,677 கோடிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறும்போது விநாடிக்கு 6,360 கன அடி வீதம் காவிரி உபரிநீர் கொண்டு வரப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 760 கண்மாய்களுக்கு நீர் ஆதாரம் பெறுவதுடன், சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பாசனம் செய்யப்படும். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் காவிரி நீர் கொண்டு செல்லப்படும்" என்றார்.

மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதாக உறுதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து 12-ம் தேதி புதுக்கோட்டையில் விவசாயிகள் சார்பில் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "இத்திட்டத்துக்கான நிதி இந்த பட்ஜெட்டிலேயே ஒதுக்கப்படும். திட்டத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் புதுக்கோட்டையில் தொடங்கி வைப்பார்" ஈன்றார்.

அதன்படி, இன்று (பிப்.14) நடைபெற்ற தமிழக பட்ஜெட்டில் காவிரி - குண்டாறு திட்டத்துக்கு முதல் கட்ட நிதியாக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக முதல்வர், துணை முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் சென்றுள்ளனர்.

பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாட்டம்

மேலும், இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ததை வரவேற்று புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியைப் பரிமாறி வருகின்றனர்.

தவறவிடாதீர்

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம்; ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு: ஓபிஎஸ் அறிவிப்பு

தமிழக பட்ஜெட் 2020: தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு; ராபர்ட் கால்டுவெல் பெயரில் இருக்கை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x