

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.
இதில், மாநில தொல்லியல் துறையின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
"கீழடி அகழ்வாராய்ச்சியின் முடிவுகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை அறிந்து கொள்வதில் பொதுமக்களின் ஆர்வத்தை மிகவும் அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த ஒரு புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
பண்டைய காலத்தின் தமிழர் நாகரிகத்தைப் பற்றி மேலும் அறிவதற்காக, கூடுதலாக 4 தொகுப்புகளில், தொல்லியல் கள ஆய்வுகள் மேற்கொள்வதற்கு மாநில தொல்லியல் துறையானது இந்திய தொல்லியல் துறையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் தொல்லியல் துறைக்காக 31.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தவறவிடாதீர்