தமிழக பட்ஜெட் 2020: தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடு; ராபர்ட் கால்டுவெல் பெயரில் இருக்கை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தமிழ் வளர்ச்சித் துறைக்காக 74.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

இதில், தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

"தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமையை கொண்டாடி உலகறியச் செய்ய தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக, ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஹுஸ்டன் பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம் மற்றும் கவுஹாத்தி பல்கலைக்கழகம் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலைக் கொண்டு வர சீரிய முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

2019-ம் ஆண்டில் சிகாகோ நகரில் நடைபெற்ற 18-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பாரிஸ் நகரில் நடைபெற்ற 4-வது ஐரோப்பிய தமிழாராய்ச்சி மாநாடு, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றுக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்துள்ளது.

ஒரு கோடி ரூபாய் மானியத்தில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கையை தமிழக அரசு நிறுவ உள்ளது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், தமிழ் வளர்ச்சித் துறைக்காக 74.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது"

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in