Published : 14 Feb 2020 10:43 AM
Last Updated : 14 Feb 2020 10:43 AM

தமிழக பட்ஜெட் 2020: 15-வது நிதிக்குழு; நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு சிறிய அளவே உயர்ந்துள்ளது - ஓபிஎஸ்

15-வது நிதிக்குழுவால் மாநிலங்களுக்கு இடையிலான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு சிறிய அளவே உயர்ந்துள்ளது என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.14) தாக்கல் செய்து பேசியதாவது:

"முதல்வர் பழனிசாமி தமிழகத்தை நன்றாக வழிநடத்துகிறார். ஆட்சி நீடிக்காது என்று பலர் கூறி வந்தனர். ஆனால், முதல்வர் தலைமையில் மிகத் திறமையுடன் தமிழக அரசு தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருகிறது. உள்நாடு மட்டுமின்றி உலக நாடுகளின் மத்தியில் தமிழகத்துக்கு பராட்டுகள் குவிகின்றன.

பொருளாதாரச் சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது. அனைத்திந்திய அளவில் கணிக்கப்பட்ட இந்திய வளர்ச்சி மதிப்பீடுகள் குறைக்கப்பட்டு, தற்போது, 2019-2020 ஆம் ஆண்டுக்கான அனைத்திந்திய வளர்ச்சி நிலையான விலைகளின் அடிப்படையில் 5 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இத்தகைய பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறம்பட சமாளித்துள்ளது.

மாநிலத்தின் பன்முக பொருளாதாரம், மாநில அரசின் நிலையான கொள்கை, ஆக்கத்திறன் வாய்ந்த முயற்சிகள், மக்களின் அயராத உழைப்பு ஆகிய காரணிகள், 2018-2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டு வளர்ச்சியின் விகிதம் 8.17 விழுக்காட்டை அடைவதை உறுதி செய்துள்ளன.

2019-2020 ஆம் ஆண்டில் 7.27 விழுக்காடு என்று மதிப்பிடப்பட்ட வளர்ச்சி விகிதமானது, அனைத்திந்திய அளவில் கணிக்கப்பட்ட 5 விழுக்காட்டை காட்டிலும் அதிகமானதாகும். 2020-2021 ஆம் ஆண்டில் மேலும் வலுவான பொருளாதார வளர்ச்சியை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.

15-வது நிதிக்குழுவின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அறிக்கையையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும், 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. 2021-2022 ஆம் ஆண்டு முதல் 2025-2025 வரை 5 ஆண்டுக்கான இறுதி அறிக்கையினை நிதிக்குழு இந்த ஆண்டின் இறுதியில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை 42% இல் இருந்து 41 % ஆக குறைக்குமாறு நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றுக்கு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயிலிருந்து இனி பங்கு அளிக்கப்படாது என்பதை கருத்தில் கொண்டால், மொத்த நிதிப்பகிர்வில் பரிந்துரைக்கப்பட்ட குறைப்பினால் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயில் பெரும் பாதிப்பு இருக்காது.

மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில், தமிழ்நாட்டின் பங்கு, 4.023% இல் இருந்து, 4.789 சதவீதமாக சிறிய அளவே உயர்ந்துள்ளது. கடந்த சில நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால், தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து குறைந்து வந்த போதிலும், இந்த உயர்வினால் மாற்றம் அடைந்துள்ளது. ஆனாலும், கடந்த கால அநீதிகளுக்கு அதிலும் குறிப்பாக 14-வது நிதிக்குழு இழைத்த பாதிப்புகளுக்கு இது முழுமையான பரிகாரம் ஆகாது.

எனவே, தமிழ்நாடு போன்ற சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களுக்கு போதிய நிதிப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம். வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 4,025 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மானியத் தொகையை முழுமையாக மாநிலங்கள் பெறுவதற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்".

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x