Published : 14 Feb 2020 08:06 AM
Last Updated : 14 Feb 2020 08:06 AM

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கு எதிராக திமுக செயல்படுகிறது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கும் எதிராக திமுக செயல்படுகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எதிர்காலத்துக்கு உத்தரவாதம்

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று காவிரிடெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திஅவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்துக்கு அதிமுக அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் வேறுபாடின்றி அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால், எதிர்க்கட்சியான திமுக, விவசாயிகளுக்கு எதிரிகட்சியாக செயல்பட்டு வருகிறது.நல்லது நடக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு குறித்து விவசாயிகளுக்குஅச்சம் ஏற்படுத்தும் வகையில் திமுக செயல்பட்டு வருகிறது.

முக்கியமான இந்தப் பிரச்சினையில் அரசியலைப் புகுத்தி, வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே திமுகவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. விவசாயிகளின் பாதுகாப்புக்காக சட்டங்களை கொண்டு வரும்போதும், மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைக்கும்போதும் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் திமுக செயல்படுவது ஏற்புடையது அல்ல. தமிழக விவசாயம் சார்ந்த பிரச்சினைக்கு ஆதரவு அளிக்காத திமுகவின் நியாயமற்ற செயல் கண்டனத்துக்குரியது.

அச்சுறுத்தக் கூடாது

தமிழக அரசின் விவசாய நலன் சார்ந்த போக்கை ஆதரிக்கவில்லை என்றாலும், விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் நம்பிக்கையை வீணாக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக திமுக செயல்பட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்ட தமிழக அரசின்திட்டங்களுக்கு திமுக எதிர்ப்புதெரிவித்து வருவது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்கள் நலனுக்கும் எதிராக செயல்படுவதையே இது காட்டுகிறது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x