Published : 13 Feb 2020 11:41 am

Updated : 13 Feb 2020 11:41 am

 

Published : 13 Feb 2020 11:41 AM
Last Updated : 13 Feb 2020 11:41 AM

வேளாண் மண்டலம்: மத்திய அமைச்சர்களிடம் கொடுத்த கடிதத்தில் இருப்பது என்ன? வெளியிடத் தயங்குவது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

rs-bharathi-slams-minister-jayakumar
அமைச்சர் ஜெயக்குமார் - ஆர்.எஸ்.பாரதி | கோப்புப் படம்.

சென்னை

டெல்லியில் மத்திய அமைச்சர்களிடம் கொடுத்த கடித விவரங்களை வெளியிடும் துணிச்சல் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இல்லை என்று மாநிலங்களவை திமுக உறுப்பினரும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்.13) வெளியிட்ட அறிக்கையில், "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக திமுக தலைவர் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்குமான உரிய விளக்கங்களுடன் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கைக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் பழனிசாமி கடந்த 9-ம் தேதி வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பில் சந்தேகங்கள் பல உள்ளன என்பதை முதன்முதலில் அமைச்சர் ஒருவரே ஒப்புக் கொண்டிருப்பது திமுக தலைவரின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும், விவசாயிகளுக்காக அவர் எழுப்பிய உரிமைக்குரலையும் நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

ஆனாலும் வழக்கம் போல் திமுக தலைவரையும் வம்பு இழுக்கும் நோக்கில் சில வீண் பழிகளை தனது அறிக்கையில் சுமத்தியுள்ளார். பாவம்! டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் சிபிஐயிடம் போய் விடுமோ என்ற அலர்ஜியில், திமுக தலைவர் மீது மீத்தேன் திட்டம் குறித்து ஏதோ உளறிக் கொட்டியிருக்கிறார்.

திமுக தலைவர் மட்டுமின்றி, திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே அத்திட்டம் குறித்து விளக்கப்பட்டு விட்டது. இதை ஏதோ அதிமுக எதிர்த்தது போல் ஜெயக்குமார் கூறியிருந்தாலும், அதிமுகவின் இணையதளத்திலேயே இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டன என்பதையும், குறிப்பாக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவே இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வத்துடன் பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்ற செய்தியையும் வசதியாக மறந்து விட்டார்.

அதுமட்டுமின்றி இத்திட்டம் குறித்த தமிழ் செய்தித்தாள் ஒன்றின் பொய்ச் செய்திக்கு மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையைக் கூட அமைச்சர் ஜெயக்குமார் படித்துப் பார்க்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பை வரவேற்ற திமுக தலைவர், முதல்வரின் அறிவிப்பு தொடர்பாக எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமா் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக அவரே மத்திய அரசுக்கு எடுத்துச் சென்ற முதல்வரின் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கூட சொல்ல அவரால் முடியவில்லை.

அந்தக் கடிதம் வேளாண் மண்டலம் தொடர்புடையதா? அல்லது சொந்த விஷயங்களுக்காகக் கொடுக்கப்பட்ட கடிதமா? பொதுப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை முதல்வர் வெளியிடத் தயங்குவது ஏன்? மாநில அரசே இதற்குச் சட்டம் இயற்ற முடியும் என்றால் எதற்காக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது?

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டல திட்டம் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? காவிரி டெல்டாவை பாலைவனம் ஆக்கும் அளவுக்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, அந்த அனுமதியை நிறைவேற்ற காவல்துறையை விட்டு பாதுகாப்பு கொடுத்தது அதிமுக அரசா இல்லையா? ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தார் என்பதற்காக சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைத்தது அதிமுக அரசா இல்லையா?

கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் பணியை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்குப் போட்டு கைது செய்து, அவரது தந்தையின் மரணத்திற்குக் கூட ஜாமீன் கொடுக்க மறுத்தது அதிமுக அரசா இல்லையா? ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காக இவ்வளவு அராஜகங்களையும் நிகழ்த்திவிட்டு, பசுத்தோல் போர்த்திய புலி போல் இப்போது புதிய வேஷம் கட்டி வந்து நிற்பது ஏன்?

உள்ளாட்சித் தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவுக்கு கொடுக்கப்பட்ட மரண அடிதானே? அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே மரண அடி தொடரப் போகிறது என்பதற்குத்தானே இப்போது புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இதற்கெல்லாம் பதில் சொல்ல தைரியம் இல்லாத அமைச்சர் ஜெயக்குமார் கூச்சமே இல்லாமல் திமுக தலைவர் ஏதோ ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்காகவே முதல்வரின் அறிவிப்பை எதிர்க்கிறார் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா?.

நீட் தேர்வு, ஜிஎஸ்டி சட்டம், உதய் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், இப்போது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் ஆகிய அனைத்திலும், மக்களைக் குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடித்து, மாநில அரசின் உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் தாரை வார்த்திருக்கும் அடிமை அரசின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக தலைவர் பற்றி சுட்டிக்காட்ட என்ன தகுதி இருக்கிறது?

ஒரு கடிதத்தில் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியாமல், அந்தக் கடிதத்தை சுமந்து கொண்டு சென்று மத்திய பாஜக அமைச்சர்களிடம் கொடுத்து, பவ்யமாக, பணிந்து, நடுங்கி நின்று விட்டுத் திரும்பியுள்ள ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி மிக முக்கியமாக இருக்கலாம். அதனால், கடித விவரங்களை வெளியிடும் துணிச்சலே இல்லாமல், சுயமரியாதையை இழந்து அடிபணிந்து கிடக்கலாம்.

ஆனால், விவசாயிகளுக்கு நலன் பயக்கும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலச் சட்டம் முறைப்படி நிறைவேற்றப்பட்டால் அதை ஆதரிக்கும் முதல் நபராக திமுக தலைவராகத்தான் இருப்பார்.

அதேநேரத்தில், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகள் தற்கொலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களை எல்லாம் அனுமதித்தது, எல்லா துரோகங்களுக்கும் ஆதரவாகவும், காரணமாகவும் இருந்துவிட்டு, இனி புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை மட்டும் அனுமதிக்க மாட்டோம் என்று விவசாயிகளை ஏமாற்ற அதிமுக அரசு முயற்சி செய்தால் அதை முதலில், துணிச்சலுடனும் சுயமரியாதையுடனும் எதிர்ப்பதும் திமுக தலைவராகத்தான் இருப்பார் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.


அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகதிமுகஆர்.எஸ்.பாரதிமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிஹைட்ரோகார்பன் திட்டம்காவிரி டெல்டாபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்Minister jayakumarAIADMKDMKRS bharathiMK stalinEdappadi palanisamyHydrocarbon projectCauvery deltaProtected agricultural zone

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author