Last Updated : 13 Feb, 2020 10:40 AM

 

Published : 13 Feb 2020 10:40 AM
Last Updated : 13 Feb 2020 10:40 AM

மாநகராட்சி மேற்கு மண்டல பகுதியில் தனியார் மூலம் உரம் தயாரிப்பு பணி சாத்தியமாகுமா?

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் தனியார் மூலம் இயற்கை உரம் தயாரிப்புப் பணி மேற்கொள்ளும் மாநகராட்சியின் திட்டம் முழு அளவுக்கு சாத்தியமாகுமா என்ற கேள்விஎழுந்துள்ளது.

மாநகரில் தினசரி சராசரியாக சேகரிக்கப்படும் 1,050 டன் குப்பை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு தரம் பிரித்து இயற்கை உரம், மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இக்கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் பணி, ஒப்பந்த அடிப்படையில் தனியாரால் மேற்கொள்ளப்படுகிறது. ‘இவர்களுக்கு தரம் பிரித்து, மக்கும் குப்பை மட்டும் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி உரம் தயாரிக்கலாம்,’ என மாநகராட்சியால் கூறப்பட்டது. ஆனால் ‘தற்போது வரை குப்பை தரம் பிரித்து தரப்படுவதில்லை. அந்நிறுவனத்தினரே பெரும் அளவுக்கு குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிப்பை மேற்கொள்கின்றனர். இதனால் கலப்புக் குப்பை அதிகமாக தேங்குகிறது’ என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இச்சூழலில், மாநகரின் 69 இடங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களை தனியாரிடம் ஒப்படைத்து உரம் தயாரித்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், சோதனை அடிப்படையில் மேற்கு மண்டலத்தில் தனியார் மூலமும், தெற்கு மண்டலத்தில் மாநகராட்சி மூலமும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகத்தினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலத்தில் உள்ள உரம் தயாரிப்பு மையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அங்கு வீடுகளில் குப்பை தரம் பிரித்து சேகரித்து மையத்தில் ஒப்படைக்கும் பணி மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் மூலமே மேற்கொள்ளப்பட உள்ளன.

முறையாக தரம் பிரிக்கப்படுமா?

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது,‘‘மேற்கு மண்டலத்தில் முழு அளவில் குப்பை தரம் பிரித்து ஒப்படைக்கப்படுமா என்பது கேள்விக்குறியே. அப்படி தரம் பிரிக்காமல் கலப்புக் குப்பை ஒப்படைத்தால் அந்நிறுவனத்தினர் தரம் பிரித்துக் கொள்வரா, அப்படி தரம் பிரிக்கும் போது குப்பை தேங்கி, உரம் தயாரிக்கும் பணி பாதிக்காதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் நடப்பது போல இங்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தரம் பிரித்து சேகரிப்பதை மாநகராட்சி நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறும்போது,‘‘தெற்கு மண்டலத்தில் 3 உரம் தயாரிப்பு மையங்களும், மேற்கு மண்டலத்தில் 8 உரம் தயாரிப்பு மையங்களும் உள்ளன. மேற்கு மண்டலத்தில் தனியார் நிறுவனத்தினர் வீடு வீடாக சென்று தரம் பிரித்து குப்பை சேகரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

அங்கு மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் பிரத்யேக வாகனங்கள் மூலம், தரம் பிரித்து சேகரித்து, மக்கும் குப்பையை தான் அம்மையங்களுக்கு வழங்குவர். அப்போது தான் கொடுக்கப்படும் குப்பையின் அளவு எவ்வளவு, உரம் தயாரிக்கப்பட்டது எவ்வளவு என முறையாக கணக்கிட முடியும். தரம் பிரித்து குப்பை வழங்க பொதுமக்களுக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x