

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கை:
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்து, விளைநிலங்களைப் பாதிக்கும் மீத்தேன்,ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்தத் திட்டங்களையும் அனுமதிக்க முடியாது என்பதை கொள்கைப் பிரகடனமாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு அதிமுக ஜெயலலிதா பேரவை உளமார்ந்த பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
கோதாவரி - கிருஷ்ணா - காவிரிஇணைப்பு, வைகை - குண்டாறுஇணைப்பு, அத்திக் கடவு அவிநாசி திட்டம், பிளாஸ்டிக் அரக்கனுக்கு முடிவு கட்டியது என பல்வேறு திட்டங்களால் நாட்டுக்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலம் தமிழகம் என்ற நிலையை உருவாக்க அருந்தொண்டாற்றி வரும் முதல்வருக்கு ஜெயலலிதா பேரவை நன்றி தெரிவிக்கிறது.
உழவர்கள் எதிர்க்கும் எந்தத் திட்டத்தையும் உறுதியாக ஏற்கமாட்டோம் என்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சூளுரைக்கு தலைவணக்கம் செய்தவர் முதல்வர் பழனிசாமி. படுகை விவசாயத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள அதிமுக அரசின் கொள்கை பிரகடனம் என்பது சரித்திரத்தில் மின்னும் முத்தாக பதிக்கப்படும்.
ஜெயலலிதாவின் நல்லாட்சியே 2021-ம் ஆண்டிலும் தொடர்ந்திட, முதல்வர் பழனிசாமியின் சாதனைகள் வழித்தடம் அமைத்து வருகின்றன.