

புதுச்சேரியைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் எதிர்க்கத் தயாராக இருக்கிறோம். புதுச்சேரி அரசை முடிந்தால் டிஸ்மிஸ் செய்யுங்கள் என, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடுகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று (பிப்.12) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசியதன் முக்கிய அம்சங்கள்:
"மத்திய பாஜக அரசு மதத்தால் மக்களைப் பிரிக்கிறது. இந்துக்கள் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை. இதர மதங்களை நசுக்குவதற்கு உருவாக்கப்படும் திட்டங்களின் முதல் படியே இத்திருத்த மசோதா.
அனைவரும் சமம் என்பதற்கு மாறாக மதத்தின் பெயரில் பிரிப்பதுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்பதால் இச்சட்டத்தை எதிர்க்கிறோம்.
இது பிரெஞ்சு ஒப்பந்தத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்தில் கண்டிப்பாக தோற்கும். ஜனநாயகத்தைக் காக்கும் வரிசைப் பட்டியலில் இந்தியாவின் தரம் குறைந்துள்ளது.
அதிமுக மாநிலங்களவையில் எதிர்த்து இருந்தால் சட்டத்தை நிறைவேற்றியிருக்க இயலாது. அவர்கள் ஆதரவால்தான் நிறைவேற்ற முடிந்தது. ஜனநாயக துரோகத்தை அதிமுக செய்துள்ளது. புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் துணைநிலை ஆளுநரிடம் மனு தந்துள்ளனர். ஆளுநருக்கும் சட்டப்பேரவைக்கும் என்ன சம்பந்தம்? சட்டப்பேரவைக்கு என தனிப்பட்ட அதிகாரம் உண்டு. அதை பறிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை.
இவ்விஷயத்தில் தட்டிக்கேட்கும் பொறுப்பு எங்களுக்குண்டு. பயப்பட மாட்டோம். புதுச்சேரியைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும், சட்டத்தையும் எதிர்க்கத் தயாராக இருக்கிறோம். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்யுங்கள். தயாராக இருக்கிறோம்.
குடியுரிமைச் சட்டத்திருத்தம் நடைமுறை தொடர்பாக தலைமைச் செயலர்கள் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. அதுதொடர்பான கோப்பில் 4 கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் மதம் மற்றும் மக்களின் தந்தை, தாத்தா மற்றும் உட்பட பல விஷயங்களைப் பதிவேற்றுவதை நடைமுறைப்படுத்த முடியாது என்று கோப்பில் எழுதியுள்ளேன்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
தவறவிடாதீர்!