

புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே காங்கிரஸ் எம்எல்ஏ அவையில் செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியதைப் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (பிப்.12) நடைபெற்றது. இக்கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. ஆளுங்கட்சியான காங்கிரஸ், கூட்டணிக் கட்சியான திமுக எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான தீர்மானம் தொடங்கி முக்கிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது, நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமிக்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார், தற்போது காமராஜ் நகர் தொகுதியில் வென்று எம்எல்ஏவாகி அவையில் அமர்ந்திருந்தார்.
அவர், "மீண்டும் என்னால் எம்எல்ஏ ஆக முடியுமா என எதிர்வரிசையில் இருந்த சிலர் சவால் விட்டனர். அதை மீறி வென்று அவைக்கு வந்துள்ளேன்" எனப் பேசினார்.
இதனிடையே, அவையில் அமர்ந்திருந்தபோது செல்போனில் பல செல்ஃபி படங்களை எடுத்தபடி இருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு அருகேயுள்ள எம்எல்ஏக்கள் அதைப் பார்த்தனர்.
சிறிது நேரத்தில் அப்புகைப்படத்தை தனது குழுக்களில் பதிவிட்டார். அது பல குழுக்களில் பகிரப்பட்ட நிலையில், பலரும் முக்கிய விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கும்போது செல்போனைப் பயன்படுத்த கூடாது, அதையும் தாண்டி செல்ஃபி எடுப்பதா என்று விமர்சிக்கத் தொடங்கினர்.
தவறவிடாதீர்