காரைக்கால், பாகூரை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து புதுச்சேரி அரசு தீர்மானம்: தமிழகத்தைத் தொடர்ந்து நடவடிக்கை

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கோப்புப் படம்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கோப்புப் படம்.
Updated on
2 min read

காரைக்கால் மாவட்டத்தையும் புதுச்சேரியில் பாகூரையும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் அறிவிக்கையினைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இன்று (பிப்.12) வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக அரசு தீர்மானமத்தை முன்மொழிந்து பேசியதாவது:

"புதுச்சேரி, தமிழக பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க தனியார் நிறுவனத்துடன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. பாதிப்பைச் சுட்டிக்காட்டி இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் கடந்த 23.7.2019 இல் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இத்திட்ட ஆய்வுகளுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்பதை மாற்றி உள்ளனர். திருத்தப்பட்ட அறிவிக்கையை வெளியிடும் முன்பு, கருத்துகளை மாநில அரசுகளிடம் கேட்கவில்லை.

ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்துவது அம்மாவட்டத்தினைப் பாலைவனமாக்கும் செயல். அத்துடன் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் ஒரு சேர அழிக்கும். காரைக்கால், பாகூர் நல்ல செழிப்பான விவசாயப் பகுதிகளைக் கொண்டது.

விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், விவசாயத்தைக் காக்கவும், விவசாயம் சார்ந்த தொழிலை வளப்படுத்தவும் காரைக்கால் மாவட்டத்தையும், புதுச்சேரி பாகூரையும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கிறேன்.

கடந்த ஜனவரி 16-ல் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிகிறேன்".

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

அதையடுத்து அரசு கொறடா அனந்தராமன் பேசுகையில், "புதுச்சேரியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகத்திலுள்ள நபரின் தன்னார்வ நிறுவனத்துக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தில் தொடர்புடைய நிறுவனம் ரூ. 2.01 கோடி நன்கொடை தந்துள்ளது. இதை தன்னார்வ நிறுவனமே கணக்கில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை" என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசினர்.

பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் கூறுகையில், "ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனம் நன்கொடை தந்துள்ளது. சட்டப் பாதுகாப்பு தேவை" என்று தெரிவித்தார்.

அதையடுத்து இறுதியில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "ஹைட்ரோகார்பன் திட்டப் பணிக்கு வேதாந்தா நிறுவனத்துக்கு புதுச்சேரி, விழுப்புரம், காரைக்கால் பகுதி தரப்பட்டுள்ளது. அந்நிறுவனம் 'இந்தியா பவுண்டேசன்' அமைப்புக்கு நிதி தந்துள்ளது. அதன் உரிமையாளர் யார் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்போம்.

ஹைட்ரோகார்பனை அனுமதிக்கமாட்டோம். காரைக்கால் பாகூரை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம். மத்திய அரசை அணுகி சட்டத்தை நிறைவேற்றி சட்ட அங்கீகாரம் தருவோம். விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்" என்றார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in