Published : 11 Feb 2020 09:39 AM
Last Updated : 11 Feb 2020 09:39 AM

கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில் பூத்துக் குலுங்கும் பவுடர் பஃப் மலர்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் பூத்துக் குலுங்குகின்றன அரிய வகை பவுடர் பஃப் மலர்கள்.

அடர்ந்த மலைக்காட்டின் நடுவே, நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கல்லாறு பகுதியில்ஆண்டு முழுவதும் சீரான தட்பவெப்பநிலை நிலவுகிறது. இங்குகடந்த 1900-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பழப்பண்ணை தொடங்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த இந்த அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில், ஒருசில இடங்களில் மட்டுமே விளையக்கூடிய வெண்ணெய்ப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், மங்குஸ்தான், துரியன், ரம்புட்டான், சிங்கப்பூர் பலா போன்ற அரிய வகை பழ வகைகள் மற்றும் மலர்கள் வளர்கின்றன.

பனிக்காலத்தின் இறுதிக் கட்டமான தற்போது இங்கு பவுடர் பஃப் மலர்கள் மலர்ந்துள்ளன. கண்ணைக்கவரும் வகையில் செந்நிறத்தில் இருக்கும் இந்த மலர்கள், அழகு நிலையங்களில் முகத்தில் பவுடர் பூச பயன்படுத்தப்படும் பஃப் போல மென்மையாகவும், நீண்ட இதழ்களோடும் காணப்படுவதால் இவற்றை `பவுடர் பஃப்' பூக்கள் என்று அழைக்கின்றனர்.

தேன் நிறைந்த இப்பூக்களைத் தேடி ஏராளமான தேன் சிட்டுகளும், கிளிகளும் வருகின்றன. வசீகரத் தோற்றத்துடன் நூற்றுக்கணக்கான மலர்கள் பூத்துள்ளதாலும், இவற்றை தேடி சிறு பறவையினங்கள் வருவதாலும் கல்லாறுஅரசு தோட்டக்கலை பழப்பண்ணைக்கு வருகைதரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்ற னர் கல்லாறு தோட்டக்கலைத் துறை பணியாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x