Published : 10 Feb 2020 10:39 AM
Last Updated : 10 Feb 2020 10:39 AM

பெட்ரோலிய மண்டலம் பற்றிய தமிழக அரசின் குறிப்பாணையைத் திரும்பப் பெறுக: வைகோ

பெட்ரோலிய மண்டலம் பற்றிய தமிழக அரசின் குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (பிப்.10) வெளியிட்ட அறிக்கையில், "காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கான கருத்துரு 2011 இல் வெளியிடப்பட்டபோது, அதற்கு முதன் முதலில் எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் நினைவில் வாழும் இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் ஆவார்.

அவரைத் தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி முதன் முதலில் மதிமுகவின் சார்பில் நான் அறிக்கை வெளியிட்டேன்.

2012 ஏப்ரல் 30 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒகேனேக்கலில் மறுமலர்ச்சி திமுக சார்பில், விவசாயிகளைத் திரட்டி என் தலைமையில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை முறியடிக்கவும், காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினோம்.

கடந்த 2019 ஆண்டு ஜூன் 23 இல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், காவிரி டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கக் கோரியும் விழுப்புரம் மாவட்டம் - மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர். மரக்காணத்தில் நடந்த மனிதச் சங்கிலியில் நானும் தோழமைக் கட்சிகளின் முன்னணியினருடன் பங்கேற்றேன்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் மக்களின் இடையறாத போராட்டங்களால், காவிரிப் படுகை மாவட்டங்களில் மக்களின் பேரெழுச்சி பன்மடங்கு பெருகியது. தமிழக மக்களின் போராட்டங்களை அலட்சியப்படுத்திய மத்திய பாஜக அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டது.

கடந்த 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரை மீதான கருத்துப் பரிமாற்றங்களின்போது, "தமிழகத்தின் வளங்களை, குறிப்பாக காவிரிப் படுகையைச் சூறையாடுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றீர்கள். காவிரிப் படுகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைகின்றீர்கள்.

மரக்காணத்தில் இருந்து வேளாங்கண்ணி வரையிலும், 324 ஹைட்ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு உரிமம் அளித்து இருக்கின்றீர்கள். மீத்தேன், பாறை எரிவாயு, ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக, நிலத்தை உடைத்துத் துளைத்துப் பிளக்கின்றீர்கள். இது காவிரி பாசனப் படுகையை அழித்து விடும். இத்தகைய முறை, அமெரிக்காவின் ஏழு மாநிலங்களிலும், ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளிலும் தடை செய்து இருக்கின்றார்கள்.

வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல, ஹைட்ரோ கார்பான்திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை இல்லை; மக்களிடம் கருத்துக் கேட்கவும் மாட்டோம் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து இருக்கின்றார். இது தான்தோன்றித்தனமானது.

மற்றொரு புறத்தில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதாக அறிவித்து இருக்கின்றது. அதற்காக, 5,900 கோடி ரூபாய் பணத்தையும் ஒதுக்கி இருக்கின்றார்கள். மேகேதாட்டு அணை கட்டிவிட்டால், அதன்பிறகு மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது" என்று தெரிவித்தேன்.

காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலம் ஆக்குவோம் என அறிவித்துள்ள முதல்வர்தான் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று இருந்தபோது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இருக்கின்றார்.

எடப்பாடி அரசு 2017 ஜூலை 19 ஆம் தேதி வெளியிட்ட குறிப்பு ஆணையில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 22938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் புரந்தன்ட் சாட்டர்ஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிப்ரவரி 7 ஆம் தேதி சந்தித்து, கடலூர் மாவட்டத்தில் அமைய உள்ள பெட்ரோலிய ரசாயன மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய பாஜக அரசு தூக்கி எறிந்து விட்டது, அதுபோல, முதல்வரின் இந்த அறிவிப்பும் ஆகிவிடக் கூடாது. எனவே, தமிழகச் சட்டப்பேரவையில், சட்டம் இயற்றுவது மட்டும் அன்றி, அதை செயல்படுத்திக் காட்டுவதிலும் முனைப்பாக இருக்க வேண்டும்.

காவிரிப் படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பதில் தமிழக அரசு உண்மையாகவே அக்கறை கொண்டு இருந்தால், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017 ஜூலை 19 இல் வெளியிட்ட அரசின் குறிப்பு ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x