Published : 10 Feb 2020 08:34 AM
Last Updated : 10 Feb 2020 08:34 AM

வேளாண் மண்டலம்: சிறப்பு சட்டம் இயற்ற கோரிக்கை

நாகை/ புதுகை

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகளும், விவசாயிகள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சமீப காலமாக மத்திய அரசு எடுத்துவந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் இப்பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மீத்தேன் திட்டம் இங்கு வரவில்லை. தற்போது, முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கக்கூடியது. இதை அறிவிப்புடன் நிறுத்தாமல், வலுவான சட்டமாக இயற்ற வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன்: முதல்வரின் அறிவிப்புக்கு டெல்டா விவசாயிகள் சார்பில் நன்றி. உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

காவிரி விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமலநாதன்: முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். உடனடியாக சிறப்பு சட்டம் இயற்றி, அதை மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல, இனி டெல்டா பகுதியில் பூமிக்கடியில் எவ்வித ஆய்வுப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது.

அகில இந்திய விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார்: டெல்டாவில் பல இடங்களில் விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்பட்டுவிட்டன. பூமிக்கடியில் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன. அதனால், இது காலங்கடந்த அறிவிப்பாக இருந்தாலும் முழுமனதுடன் வரவேற்கிறோம்.

நசுவினி ஆற்றுப்படுகை அணை விவசாயிகள் சங்கத் தலைவர் வி.வீரசேனன்: முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இனி விவசாயம் சாராத தொழிற்சாலைகளை டெல்டாவில் தொடங்க அனுமதி அளிக்கக் கூடாது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் வ.சேதுராமன்: முதல்வரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக சட்டப் பூர்வ அங்கீகாரத்தைத் தருவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஓஎன்ஜிசி திட்டங்களில் அரசின் அணுகுமுறை குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.

பாரம்பரிய நெல் காப்பாளர் தலைஞாயிறு சோமு.இளங்கோ: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதால், விவசாயத்தை நம்பி உள்ள 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. தற்போது, டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதன் மூலம் விவசாயிகள் பாதுகாக்கப்படுவர். வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்த அறிவிப்பு மட்டும் போதாது. நடக்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதுதொடர்பாக அவசரச் சட்டம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்பி பரிந்துரைக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி: ஆங்கிலேயர் காலத்தில் காவிரி டெல்டா பகுதிகள் ‘தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்பட்டது. அதை உறுதிசெய்யும் வகையில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. முதல்வருக்கு நன்றி. இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். விவசாயம், மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருப்பதால், மத்திய அரசின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. விவசாயம், மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருப்பதால், மத்திய அரசின் ஒப்புதல் பெறத் தேவையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x