விஜய்யின் 'பிகில்' சம்பளம் குறித்து விசாரிக்கிறோம்: அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் ரூ.77 கோடி பணம் பறிமுதல்: வருமான வரித்துறை

விஜய்யின் 'பிகில்' சம்பளம் குறித்து விசாரிக்கிறோம்: அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் ரூ.77 கோடி பணம் பறிமுதல்: வருமான வரித்துறை
Updated on
2 min read

நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. இதில் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் ரூ.77 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக ரசிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் தரப்பில் கொண்டாடப்பட்டது. ரூ.300 கோடி வசூலானதாகக் கூறப்பட்டது. அதையொட்டி திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''சமீபத்தில் வெளியான விஜய்யின் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாக ரூ.300 கோடி அளவு வசூலில் வெற்றி பெற்றதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (பிப்ரவரி-5) வருமான வரித்துறை, திரைப்படத் துறையில் உள்ள நான்கு முக்கிய நபர்களிடம் அதிரடி சோதனை நடத்தியது.

தயாரிப்பாளர், நடிகர் விஜய், அவரது படத்தின் பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் இந்த சோதனை இரண்டு நாளாக நடந்தது.

வருமான வரித்துறை சோதனையில் முக்கியமான அம்சம் பைனான்சியர் அன்புச்செழியனிடம் கணக்கில் காட்டாப்படாத ரூ.77 கோடி ரொக்கப் பணத்தை சென்னை, மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரகசிய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர இந்தச் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், காசோலைகள், முன் தேதியிட்ட காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த முழு சோதனையில் கிடைத்த ஆவணங்கள், சாட்சிகள் அடிப்படையில் மறைக்கப்பட்ட பணம் ரூ.300 கோடியைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் முக்கிய நபர்களில் ஒருவராக விநியோகஸ்தர் உள்ளார். அவர் கட்டுமானத் தொழில் செய்து வரும் நபராகவும் உள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களும் அசல் ஆவணங்கள் ஆகும்.

மேற்கண்ட ஆவணங்களை அவருக்குச் சொந்தமான மறைவிடங்களிலிருந்தும், அவரது நண்பர் சரவணனுக்குச் சொந்தமான இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மதிப்பு, உண்மைத்தன்மை குறித்த ஆய்வும் நடக்கிறது.

சோதனையின் இன்னொரு நபரான படத் தயாரிப்பாளருக்கு விநியோகம், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன, அநேக படங்களைத் தயாரித்துள்ளார். அவரது அலுவலக வரவு- செலவு கணக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், வவுச்சர்கள் உண்மையாக நடிகருக்கு வழங்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட விவரங்களை ஆராயும் பணியும் தொடர்கிறது.

சோதனையில் முக்கிய நடிகரின் சொத்து ஆவணங்களில் அவரது முதலீடு ஆய்வு செய்யப்படுகிறது. அவருக்குக் குறிப்பிட்ட திரைப்படத்தில் தயாரிப்பாளரிடமிருந்து அளிக்கப்பட்ட சம்பளம் குறித்த விசாரணை இந்தச் சோதனையின் முக்கிய அம்சம் ஆகும். சில இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது”.

இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடந்து வருகிறது. இதில் அவரிடமும், அவரது மனைவியிடமும் பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாக்குமூலமும் பெறப்படுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in