

9,10-ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் எண்ணிக்கை 100% அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, இடைநிற்றலுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து சரி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் சுதாகர் துகாராம் மற்றும் பிபி சவுத்ரி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''ராஜஸ்தான், கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் குறைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மாணவர்களின் இடைநிற்றல் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2015-16 ஆம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 8 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் விகிதம், 2017-18 ஆம் கல்வியாண்டில் 16.2 சதவீதமாக அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
''தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9 மற்றும் 10 வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் இடைநிற்றல் 100% அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த வகுப்புகளில் 2015-16 ஆம் கல்வியாண்டில் 8% ஆக இருந்த இடைநிற்றல் 2017-18 கல்வியாண்டில் 16.2%ஆக உயர்ந்திருக்கிறது. அதிலும், அதிக அளவிலான இடைநிற்றல்கள் 2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கின்றன. இது, பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும் குறியீடாகும்.
இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, இடைநிற்றலுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து சரி செய்ய வேண்டிய கடமை பழனிசாமி அரசுக்கு இருக்கிறது. அதற்கான பணிகளில் அவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!