Published : 05 Feb 2020 12:53 PM
Last Updated : 05 Feb 2020 12:53 PM

தென் ஷீரடி கோயில் சுற்றுலா; வியாழன்தோறும் சொகுசுப் பேருந்து: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவிப்பு

வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சென்னையிலிருந்து தென் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சுற்றுலா செல்ல சொகுசுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பொதுமக்களுக்கு சுற்றுலா சேவைகளை வழங்கிடும் நோக்கத்துடன் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு வகையான சுற்றுலாக்களை நடத்தி, சுற்றுலா சேவைகளை வழங்கி வருகிறது.

இக்கழகத்தின் கீழ், தங்கும் விடுதிகளும், சொகுசுப் பேருந்துகளும் உள்ளன. தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாவைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஒருநாள் தென் ஷீரடி சாய்பாபா கோயில் சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி கிராமத்தில் ‘தென் ஷீரடி’ என்று அழைக்கப்படும் விதமாக சாய்பாபா கோயில் கட்டப்பட்டுள்ளது. வேப்பமரத்தை மையமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட சாய்பாபா மந்திர், ஆசியாவிலேயே மிகப்பெரிய சீரடி சாய்பாபா கோயில் அக்கரைப்பட்டிதான் என்ற பெருமை பெற்றுள்ளது.

15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட தரைதளத்தில் தியான மண்டபம், முதல் தளத்தில் பிரம்மாண்ட சாய்பாபாவின் பளிங்குச் சிலையுடன் கூடிய சந்நிதி ஆகியவை அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டு உள்ளன. மேலும் பாபாவின் சமாதி மந்திர், விநாயகர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், தத்தாத்ரேயர் சந்நிதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

அக்கரைப்பட்டிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இச்சுற்றுலா ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 5 மணி அளவில் புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் ஆராத்தி தரிசனம் முடித்து இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தடையும். காலை உணவு உளுந்தூர்பேட்டையிலும், மதிய உணவு திருக்கோயிலிலும், மாலை சிற்றுண்டியுடன் ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் ஷீரடி சாய்பாபா சுற்றுலா சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து (திருவல்லிக்கேணி, டி-1 காவல் நிலையம் அருகில்) இச்சுற்றுலாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதியுள்ள சொகுசுப் பேருந்து இயக்கப்படும்.

இச்சுற்றுலாவிற்கு பெரியவர்களுக்கு ரூ.1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இச்சுற்றுலாவிற்கு வழிகாட்டி உதவியுடன் குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும்.

மேலும் தொடர்புக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, தொலைபேசி: 04425333333/ 25333444/ 25333857/25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, இணையதள முகவரி: www.ttdconline.com இணையதள முன்பதிவு: www.mttdonline.com கைபேசி முன்பதிவு: www.mttdonline.com http://www.mttdonline.com “.

இவ்வாறு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x