Last Updated : 03 Feb, 2020 05:11 PM

 

Published : 03 Feb 2020 05:11 PM
Last Updated : 03 Feb 2020 05:11 PM

குரூப்1 பணியிட நியமனத்துக்கு தடை கோரி வழக்கு: டிஎன்பிஎஸ்சி செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

குரூப்-1 பணியிட நியமனத்தில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், தொலைநிலைக் கல்வியில் பயின்று தேர்வானவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடை கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருமனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நான் மதுரை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை தமிழ் வழியில் பயின்று 2017-ல் வழக்கறிஞராக பதிவு செய்தேன்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1-ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்துத் தேர்வும் எழுதினேன்.

அதைத்தொடர்ந்து பிரதான எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் டிசம்பர் 9-ல் வெளியிடப்பட்டது.

அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தெரிவு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது.

அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவராக இருந்தும் எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது. தொலைநிலை கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர் சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர்.

ஆகவே இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர்.

ஆகவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்.

தொலைநிலை கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் இது குறித்து டிஎன்பிஎஸ்சி.,யின் செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x