Last Updated : 28 Aug, 2015 08:34 AM

 

Published : 28 Aug 2015 08:34 AM
Last Updated : 28 Aug 2015 08:34 AM

கோவையில் 3 பேர் படுகொலை சம்பவம்: ஜாமீனில் வந்த கைதியை குறிவைத்து நடந்த கொடூரம் - 12 பேர் மீது வழக்கு பதிவு

கோவையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூலிப்படை ஒன்று, பொதுமக்கள் முன்னிலை யில் கழுத்தை அறுத்தும், துப்பாக்கி யால் சுட்டும் 3 பேரை கொலை செய்தது. கைதி ஒருவரை குறி வைத்து நடத்தப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தஞ்சை, மேலமருதக்குடியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன்கள் ம.க.ஸ்டாலின், ம.க.ராஜா. பாமக மாநிலத் துணைத் தலைவராக ஸ்டாலின் உள்ளார். ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

ராஜா, 2013-ல் செல்வகுமார் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 18-வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருநீலக்குடி போலீஸில் தொடரப்பட்ட வழக்கில் 31-வது குற்றவாளியாகவும், மேலும் சில வழக்குகளிலும் இவர் சேர்க் கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்.3-ம் தேதி கோவில் சன்னாபுரம் என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, திருவிடைமரு தூர் போலீஸார் லாலி மணிகண்டன், ஐயப்பன், கோபி, ராமராஜன் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். அதில் லாலி மணிகண்டன், ராமராஜன் உட்பட 3 பேர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டு பின்னர், சமீபத்தில் கோவை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த 23-ம் தேதி ராமராஜனும், 26-ம் தேதி லாலி மணிகண்டனும் ஜாமீனில் வெளிவந்தனர். லாலி மணிகண்டனை அழைத்துச் செல்வ தற்காக அவரது சகோதரர் மாதவன், அருண், தியாகு (எ) தியாகராஜன், ரவி(45), கார்த்தி(20), மணி(25), மணிகண்டன்(22) ஆகியோர் தஞ்சாவூரில் இருந்து வாடகை கார் உரிமையாளர் ரவியுடன் கோவை வந்தனர். மணிகண்டனை அழைத்துக் கொண்டு 26-ம் தேதி இரவு திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

கோவை, சிந்தாமணிப்புதூரை அருகே பைபாஸ் சாலை சிக்னலில் கார் நின்றிருந்தபோது, மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல், ரவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அருண், மாதவன், தியாகு (எ) தியாகராஜன் ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. தப்பியோட முயன்ற மாதவனின் கழுத்தை அறுத்து எறிந்துவிட்டு, அவினாசி சாலை வழியாக அந்த கும்பல் தப்பியது.

காரின் பின்புறம் அமர்ந்திருந்த லாலி மணிகண்டன், கார்த்திக், மணி, மணிகண்டன் ஆகியோர் தப்பியோடினர். சந்தேகத்தின் பேரில் லாலி மணிகண்டனை பொதுமக்கள் பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய் தனர். கூலிப்படையை பிடிக்க 6 தனிப் படைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

லாலி மணிகண்டன் மீது ஏற்கெனவே பல கொலை வழக்கு கள் உள்ளன.

வழக்கறிஞர் ராஜா கொலை யின் பழிவாங்குதலாக இந்த 3 கொலைகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மணிகண்டனுக்கு கடலூர் சிறை யில் அச்சுறுத்தல் இருந்ததாதால், 5 நாட்களுக்கு முன்னர் அவர் கோவைக்கு மாற்றப்பட்டார். அவர் ஜாமீனுக்கு விண்ணப்பித்தது தெரிந்த உடனேயே கூலிப்படை கோவைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் கண்காணிப்பை மீறி இந்த கூலிப்படை, திட்டமிட்டு கொலைகளை செய்துவிட்டு நெடுஞ் சாலை வழியே தப்பியுள்ளது.

12 பேர் மீது வழக்கு

3 பேர் கொலை தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராம், தேவனாஞ்சேரி பிரபு, நடுவக்கரை சரண், பேபி சரவணன், தாராசுரம் கார்த்தி, திருப்பரம்பயம் ஜோதி, அப்பு (எ) சுந்தரமூர்த்தி, விவேக், சரவணன், ராஜேஷ், சுரேந்திரன், தினேஷ் ஆகிய 12 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x