Published : 02 Feb 2020 01:51 PM
Last Updated : 02 Feb 2020 01:51 PM

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைப் பேச்சு; பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

மதச் சார்பின்மைக்கு எதிராகப் பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு கொலை குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

பேட்டியில் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து:

''விஜயரகு கொலை செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், கொலை செய்யப்பட்ட விதம் மதரீதியானதுதான். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்படவில்லை. அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. இப்படியே போனால், இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தால், அதற்கு திமுக போன்ற கட்சிகள் ஒத்துழைத்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு சாரர் தப்பு செய்தால் கண்டிப்பதும், ஒரு சாரர் தப்பு செய்தால் அதைக் கண்டும் காணாமல் இருப்பதும் திமுகவின் வாடிக்கையாக உள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில அரசியல் இயக்கங்கள் தொடர்ந்து இதைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது''.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.

ஸ்டாலின் முகநூல் பதிவு

''பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபனை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திர பாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச் சார்பின்மைக்கு எதிராகப் பேசுகிறார். மக்களை மதரீதியாகத் துண்டாடத் துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜயரகு கொலைப் பின்னணி

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருசக்கர நுழைவுப் பகுதியில் வாகனத்திற்கு சீட்டு வழங்கும் வேலை செய்து வந்தவர், வரகனேரி பகுதியைச் சேர்ந்த விஜயரகு (40). இவர் பாரதிய ஜனதா கட்சியில் பாலக்கரை பகுதி நிர்வாகியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் ஜனவரி 27-ம் தேதி காலை மிட்டாய் பாபு என்பவர் விஜயரகுவை வெட்டி விட்டுத் தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயரகுவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயரகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய ஹரிபிரசாத், பாபு (எ) மிட்டாய் பாபு, சுடர் வேந்தன், சச்சின், முகமது யாசர் ஆகிய ஐந்து பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்தக் கொலை தனிப்பட்ட பகை காரணமாகவும், குடும்பத்துடன் இருந்த தனிப்பட்ட முன் விரோதம் காரணமாகவும் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு கொலை முன்விரோதம் காரணமாக நடந்தது. மற்றபடி இதற்கு கலர் பூசும் விவகாரம் எதுவும் இல்லை என திருச்சி காவல் ஆணையர் வரதராஜு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x