Published : 01 Feb 2020 08:51 AM
Last Updated : 01 Feb 2020 08:51 AM

குரூப் 2-ஏ தேர்விலும் முறைகேடா?- குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி டிஎன்பிஎஸ்சி புகார்: சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர்

குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்துசிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தபின்,தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு புகார் வந்ததும் ஆவணங்கள் ஆய்வு, நேரடி விசாரணைகள் மூலம் தவறுகள் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பின், அதுகுறித்த மேல்விசாரணை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியான தேர்வர்கள்கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 2017-ல் நடத்தப்பட்ட குரூப் 2-ஏ தேர்விலும் தவறுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுவதால், அந்த தேர்வு குறித்தும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி உரிய ஆவணங்கள் காவல்துறையிடம் தரப்பட்டுள்ளன.

வாகன ஆய்வாளர் தேர்வு

இதற்கிடையே மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வை பொறுத்தவரை முன்அனுபவ சான்றிதழ் சரிபார்ப்பு போக்குவரத்துத் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு, அத்துறை அளித்த விவரங்கள் அடிப்படையில் 33 பேருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.

தற்போது உயர் நீதிமன்றம் வெளியிட்ட ஆணையில், போக்குவரத்துத் துறை நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில்தான் தவறு நிகழ்ந்ததாகவும், இப்பணியை முழுவதும் மறுஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முடிவுகள் குறித்து எந்த சந்தேகமும் கூறப்படவில்லை.

இதேபோல், அரசு விதிகளின்படி வேளாண் துறையில் இளநிலை பொறியாளர் பதவிக்கு வேளாண் பொறியியல் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேளாண் பொறியியல் படித்தவர்கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே இதர துறைகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு இப்பணியில் இடம் அளிக்கப்படும்.

இந்தத் தேர்வு முடிவுகளில் மற்ற துறை மாணவர்களைவிட, குறைவான மதிப்பெண் பெற்றவேளாண் பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். எனவே, இதிலும் எவ்வித தவறுகளும் நடைபெறவில்லை.

இதுதவிர 2019-ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் இறுதியாக தேர்வான 181 பேரில் 150 பேர் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகின.

இதை ஆராய்ந்தபோது, அதில்எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என உறுதியாகியுள்ளது. தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்துக்குள் பல்வேறு பயிற்சி மையங்கள் நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையங்களில் இருந்து தேர்ச்சி பெற்றதாக அளித்துள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டுகிறது. இவ்வாறாக பயிற்சி மையங்கள் அளிக்கும் விளம்பரங்களில் ஒரே தேர்வரை ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமைகோரும் நிலை யும் நிலவுகிறது.

மேற்கூறப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் புகார்கள் எதுவும் பெறப்படாமலேயே ஊடகங்களில் வந்த செய்திகளின்படி தேர்வாணையம் விசாரணை செய்து முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் உரிய விசாரணை நடத்தப்படுகிறது. இனிவரும் காலங்களிலும் தேர்வாணையத்தின் கவனத்துக்கு வரும் அனைத்து புகார்களும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, வெளிப்படையான ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வர்களும் சமூக பொறுப்புணர்ந்து நேர்மையான வழிகளில் மட்டும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். ஒருபோதும்இடைத்தரகர்களை நம்பவேண்டாம். இதுகுறித்த தகவல் தெரிந்தால் தேர்வாணையத்தின் கவனத்துக்கு உடனே கொண்டுவர வேண்டும்.

இனிவரும் காலங்களில் எந்த தவறுகளும் நிகழாதவண்ணம் இருக்க தகுந்த சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, 2017-ல் நடத்தப்பட்ட குரூப் 2-ஏ தேர்விலும் தவறுகள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் சிபிசிஐடிபோலீஸார் விசாரணையைத்தொடங்கியுள்ளனர். தனிப்படைஅமைக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய தேர்வர்களை அழைத்து விரிவான விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் குரூப் 4 தேர்வு முறைகேடு போல இந்தத் தேர்வு விவகாரமும் விஸ்வரூபம் எடுக்குமா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x