Published : 01 Feb 2020 08:46 AM
Last Updated : 01 Feb 2020 08:46 AM

தமிழக வேளாண்மைத் துறைக்கு ரூ.100 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.99 கோடியே 83 லட்சம் மதிப்பிலான வேளாண்மைத் துறை கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் இயங்கும் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.10 கோடியில் கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், ரூ.89 கோடியே 83 லட்சத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண் கல்லூரிகளில் பயிற்சியாளர் விடுதி, ஆசிரியர் மையம், நூலகக் கட்டிடம், வேளாண் துறை சார்ந்த குளிர்பதன கிடங்கு, விதை சேமிப்பு கிடங்கு, சிப்பம் கட்டும் கூடம், விவசாயிகளுக்கான சேவைமையம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.99 கோடியே 83 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடங்களின் திறப்பு விழா, தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வேளாண் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, தலைமைச் செயலர் க.சண்முகம், வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் எஸ்.ஜே.சிரு, வேளாண் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ந.சுப்பையன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாணவர் விடுதி கட்டிடங்கள்

சென்னை லேடி வெலிங்டன்வளாகத்தில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியருக்காக கட்டப்பட்டுள்ள 2 விடுதிக் கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

மேலும், அரியலூர் மாவட்டம்சுண்டக்குடி, கோவை மாவட்டம்நாயக்கன்பாளையம், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்,ராமநாதபுரம் மாவட்டம் திருவரங்கம், சிவகங்கை மாவட்டம் இடையமேலூர், வேதியரேந்தல் மற்றும்தமராக்கி ஆகிய இடங்களில்கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர்களுக்கான விடுதிக் கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டிடம், ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் மற்றும் ஆர்.எஸ். மங்கலம் ஆகிய இடங்களில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவியருக்கான 2 விடுதிக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ.12 கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் 12 கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ். வளர்மதி, தலைமைச் செயலர் க.சண்முகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலர் ஆ.கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் சி.காமராஜ், சிறுபான்மையினர் நல இயக்குநர் சீ.சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x