Last Updated : 30 Jan, 2020 08:21 PM

 

Published : 30 Jan 2020 08:21 PM
Last Updated : 30 Jan 2020 08:21 PM

பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டு: திருக்குறளைத் தொடர்ந்து விரைவில் செய்திகளும் ஒலிபரப்பு

பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டில் திருக்குறளைத் தொடர்ந்து செய்திகளும் ஒலிபரப்பப்பட உள்ளன.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள பழமையான மணிக்கூண்டும், அங்குள்ள கிளமென்சோ பூங்காவும், முறையான பராமரிப்பின்றி பழுதானது. மணிக்கூண்டினை பழமை மாறாமல் புதுப்பித்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனும் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இப்பணிக்கு, அவரது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தை ஒதுக்கிக் கொடுத்தார். அதையடுத்து, மணிக்கூண்டை சீரமைத்தல், வண்ணம் பூசுதல், புதிதாக கடிகாரம் பொருத்துதல், அங்குள்ள கிளமென்சோ பூங்காவைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் புதுச்சேரி நகராட்சி சார்பில் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டன.

இதில், மணிக்கூண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டு ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை சப்தம் எழுப்புவதோடு, நேரத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்குறளை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், எளிதாக மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணி அடித்து முடிந்ததும், ஒரு திருக்குறள், அதற்கான விளக்க உரையுடன் ஒலிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 1330 திருக்குறளும், பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மணிக்கொரு முறை மணியுடன் திருக்குறள் ஒலித்து, அதன் விளக்கவுரையும் ஒலிபரப்பாகிறது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இதற்குப் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றன. இதே மணிக்கூண்டில் மணிக்கொரு முறை செய்திகளை ஒலிபரப்ப சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ கூறுகையில், "முத்தியால்பேட்டை மணிக்கூண்டில் திருக்குறளுடன் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2 நிமிடம் தமிழில் செய்திகளும், ஒரு நாளைக்கு 3 முறை 15 நிமிடம் தேசிய அளவிலான தமிழ் செய்திகளையும் ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டேன். அதற்காக புதுச்சேரி அகில இந்திய வானொலி மையத்தின் இயக்குனர் சாய்ராம், உதவிப் பொறியாளர் இளங்கோ ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அதன் பிறகு அகில இந்திய வானொலி மையத்தின் அதிகாரிகள், முத்தியால்பேட்டை மணிக்கூண்டில் தமிழில் செய்திகளை ஒலிபரப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் முத்தியால்பேட்டை மணிக்கூண்டில் திருக்குறளுடன் அன்றாட தமிழ் செய்திகளும் ஒலிபரப்பு செய்யப்படவுள்ளன" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x