Published : 05 Aug 2015 07:32 PM
Last Updated : 05 Aug 2015 07:32 PM

மதுவிலக்கு அமலாகும் வரை போராட்டம் ஓயாது: இளங்கோவனை சந்தித்தபின் விஜயகாந்த் அறிவிப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்துப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘மதுவிலக்கு அமலாகும்வரை எங்கள் போராட்டம் ஓயாது’ என்றார்.

மக்களவையில் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணா சாலை தர்கா அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இளங்கோவன், குமரிஅனந்தன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து, புதுப்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், மதுவிலக்கை வலியுறுத்தி சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்த மாற்றுத் திறனாளிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அங்கிருந்து புதுப்பேட்டை சமூக நலக்கூடத்துக்கு வந்த விஜயகாந்த், இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் விஜயகாந்த் கூறும்போது, ‘‘காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது. மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கு அமலுக்கு வரும் வரை எங்களின் போராட்டம் ஓயாது’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்ததை அக்கட்சியுடனான கூட்டணிக்கு அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாமா? என நிருபர்கள் கேட்டபோது, ‘‘கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் இதுவல்ல. எல்லாவற்றையும் உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்’’ என்றார் விஜயகாந்த்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x