Published : 29 Jan 2020 04:13 PM
Last Updated : 29 Jan 2020 04:13 PM

240 புதிய அரசுப் பேருந்துகள்; 2 நடமாடும் பணிமனைகள்: தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

240 புதிய பேருந்துகளையும், 2 நடமாடும் பணிமனைகளையும் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ், 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 புதிய அரசுப் பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்தார். இதற்கான நிதி ஒதுக்கீடும் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வாங்கப்பட்ட 240 புதிய பேருந்துகளை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜன.29) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், திருச்சி மற்றும் தஞ்சாவூரை மையமாகக் கொண்டு செயல்படும் இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமனைகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புதிதாக இயக்கப்படும் 240 பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்துக் கழககத்துக்கு 103 பேருந்துகளும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 37 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 25 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 10 பேருந்துகளும், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 35 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 5 பேருந்துகளும், திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 5 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல், திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் அம்மா அரசு நடமாடும் பணிமனை அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் தஞ்சாவூரை மையமாகக் கொண்டு செயல்படும் பணிமனை திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பழுதாகும் இடத்திற்கே சென்று சரி செய்திட ஏதுவாக தலா 3 பணியாளர்களைக் கொண்டு இயங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதல் எரிபொருள் செலவீனமும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x