Published : 29 Jan 2020 07:22 AM
Last Updated : 29 Jan 2020 07:22 AM

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு- சென்னை போக்சோ நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை அயனாவரத்தில் மாற்றுதிறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்வரும் பிப்.1-ம் தேதி தீர்ப்பளிக்கப் படும் என சென்னை போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது மாற்று திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த குடியிருப்பில் பணிபுரிந்த காவலாளி பழனி, பிளம்பர் ஜெய்கணேஷ், லிப்ட் ஆபரேட்டர்கள் தீனதயாளன், பாபு உட்பட 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலையில் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த 17 பேர் மீதான விசாரணை, சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்கும் போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி மஞ்சுளா முன்பாக கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதையடுத்து எஞ்சிய 16 பேர் மீதான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் 6 –ம் தேதி முடிவடைந்தது. அதையடுத்து அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மஞ்சுளா அறிவித்துள்ளார். போக்சோ சட்டத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தத்தின்படி சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளதாகவும், அதற்கு விசாரணை நீதிமன்றத் துக்கும் அதிகாரம் உள்ளதாகவும் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x