Last Updated : 27 Jan, 2020 08:09 AM

 

Published : 27 Jan 2020 08:09 AM
Last Updated : 27 Jan 2020 08:09 AM

எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய தீவிரவாத அமைப்பில் துப்பாக்கி பயிற்சி பெற உதவியவர் குறித்து தவுபீக் தகவல்: காயல்பட்டினம் பெண்ணிடம் போலீஸார் விசாரணை

தவுபீக்

நாகர்கோவில்

எஸ்.ஐ. வில்சனை கொலை செய்ய தீவிரவாத அமைப்பில் துப்பாக்கியால் சுட பயிற்சி பெற்றதாகவும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் இதற்கு உதவி செய்ததாகவும் தவுபீக் தெரிவித்துள்ளதையடுத்து நேற்று அவரை அங்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இருவரையும் காவலில்எடுத்து கடந்த 21-ம் தேதி முதல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பதிவு

வில்சனை கொலை செய்த விதம்குறித்து தவுபீக், அப்துல் ஷமீம் இருவரும் நேற்றுமுன்தினம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் நடித்துக் காட்டினர்.இதை போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர். வில்சன் கொலையில் பல முக்கிய ஆதாரங்களை போலீஸார் திரட்டியுள்ள நிலையில், சம்பவத்தின் போது கொலையாளிகள் அணிந்திருந்த உடைகளை கைப்பற்ற வேண்டியுள்ளது.

மீண்டும் வரும் 31-ம் தேதி இருவரையும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, கொலை தொடர்பான முக்கிய ஆதாரங்களை நீதிபதி முன் சமர்ப்பிக்க போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.

நீடிக்கும் மர்மம்

கொலைக்கு பயன்படுத்திய 7.65 எம்எம் கைத்துப்பாக்கியை வாங்கி கொடுத்ததாக அப்துல் ஷமீம், தவுபீக் தெரிவித்ததன் பேரில்,பெங்களூருவைச் சேர்ந்த மெகபூபாஷா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் தீவிரவாத இயக்கத்தில் தொடர்புடைய வேறு சிலரின் பெயர்களையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.

பெண்ணிடம் விசாரணை

வில்சனை கொலை செய்யதீவிரவாத அமைப்பில் துப்பாக்கியால் சுட பயிற்சி பெற்றதாகவும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த ஒருவர் இதற்கு உதவி செய்ததாகவும் தவுபீக் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று மாலை டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான தனிப்படை போலீஸார் தவுபீக்கை அழைத்துக் கொண்டு காயல்பட்டினம் சென்றனர்.

எஸ்ஐ வில்சனை கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு செய்யது அலி நவாஸுடன் காயல்பட்டினம் வந்து சென்றதாக போலீஸாரிடம் தவுபீக் தெரிவித்ததன் அடிப்படையில் முகைதீன் பாத்திமாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரவிசாரணைக்கு பின்னர் போலீஸார் மீண்டும் தவுபீக்கை நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்
எஸ்ஐ வில்சன் கொலை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று விசாரணையை தொடங்கினர். இதற்காக என்ஐஏ டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும், கேரள மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையிலான போலீஸாரும் நேற்று மாலை நாகர்கோவில் வந்தனர். நேசமணி நகர் காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் அப்துல் ஷமீமிடம் விசாரணை நடத்தினர். இதேபோல் தவுபீக்கிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x