Published : 24 Jan 2020 18:43 pm

Updated : 24 Jan 2020 18:43 pm

 

Published : 24 Jan 2020 06:43 PM
Last Updated : 24 Jan 2020 06:43 PM

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கைவிட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

cpm

சென்னை

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை கைவிட்டு, ஆரம்பப்பள்ளி கல்வித் தரம் உயர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழ அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த ஆண்டு (2019-2020) முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குழந்தைகள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டு இன்னமும் இறுதிப்படுத்தாமல் உள்ள தேசிய கல்விக் கொள்கையில் இத்திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு இது குறித்து முடிவெடுக்கும் முன்பே, தமிழக அரசு முந்திக் கொண்டு நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பது தமிழக மாணவர்களை மட்டுமல்லாமல், தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாகும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம் குழந்தைகள் அச்சம், அதிர்ச்சி மற்றும் பதட்டம் இல்லாமல் குழந்தை பருவத்தில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான். கல்வி கற்கும் குழந்தைகளின் கற்றல் திறன் வெளிப்பாட்டை அறிந்திட பல்வேறு குழந்தை நேய வழிமுறைகள் உள்ளபோது மிகவும் பழமையான தேர்வு முறையை தமிழ்நாடு அரசு பின்பற்ற முயற்சி செய்வது மிகவும் வருந்தத்தக்கது.
கல்வியில் சிறந்து விளங்கும் உலக நாடுகளில் கூட 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் நடைமுறை இல்லை. பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு பெரும் மனஉளைச்சலையும், குழப்பங்களையுமே ஏற்படுத்தும். குழந்தைகளின் கல்வி அறிவு வளர எந்த பயனையும் இது அளிக்காது.
சமீபத்தில் ஆரம்பப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் குறித்து வந்துள்ள வருடாந்திர கல்வி அறிக்கை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாதது, புதிய முறையிலான பயிற்சிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது. தமிழகத்திலும் இதே நிலைமை நீடித்து கொண்டுள்ளது. உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை வளர்ப்பதற்கான நவீன முறைகளை கையாள்வதற்கு மாறாக, பழைய தேர்வு முறையை கையாள்வதும் அதுவும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை புகுத்துவது, அம்மாணவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்போதைக்கு இத்தேர்வுகளில் தேர்ச்சி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இத்தகைய பொதுத் தேர்வு முறையின் மூலம் பல குழந்தைகளை தோல்வியடையச் செய்து பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேற்றுவதற்கே வழி ஏற்படுத்தும். குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், பெண் குழந்தைகள் இத்திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய காரணங்களினாலேயே பத்தாம் வகுப்பு வரை தேர்வுகள் இல்லாத முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, தமிழ் சமூகத்தின் எதிர்கால மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு தடைகல்லாக அமைந்துள்ள 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறையினை கைவிட வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்கு கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தி கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் நியமித்தல் அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
நாளைய தலைமுறையின் நலனை கணக்கில் கொண்டு தமிழக அரசின் இத்தேர்வு முறையினை எதிர்த்து மாணவர்களும், இளைஞர்களும், அனைத்துப் பகுதி மக்களும் கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.’’ எனக் கூறியுள்ளார்.


Cpmபொதுத்தேர்வுசிபிஎம்கே.பாலகிருஷ்ணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author