Published : 24 Jan 2020 07:40 AM
Last Updated : 24 Jan 2020 07:40 AM

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா வழக்கில் திமுகவின் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பான வழக்கில் சிபிஐ தரப்பையும் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி திமுக தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017-ல் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் - ஓபிஎஸ் அணியினர் தனித்தனியாக போட்டியிட்டனர். இதில் வாக்காளர்களுக்கு தினகரன் ஆதரவாளர்கள் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அதிக அளவில் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் தற்போதைய முதல்வர் பழனிசாமி மற்றும் முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதில், குற்றம்சாட்டப்பட்டவர்களாக யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. பின்னர் இந்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அந்த எப்ஐஆரை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ், வழக்கறிஞர் வைரக்கண்ணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

தேர்தல் ஆணையம் தரப்பில்வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், வருமானவரித் துறை சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ் ஆஜராகி வாதிட்டனர்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் இருக்கும்வழக்கை போலீஸார் தெரிவிக்காமல் மறைத்ததால்தான், அந்தஎப்ஐஆரை தனி நீதிபதி ரத்துசெய்துள்ளார்.

இதில் போலீஸாரும், அதிகாரிகளும் கூட்டாக சேர்ந்து பல முறைகேடுகள் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு புதிதாக புகார் அளிக்குமாறு மாநிலதலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியும், இதுவரை யார்மீதும் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. அதனால்தான் இந்த வழக்கில் சிபிஐ தரப்பையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோருகிறோம்’’ என்றார்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘இதுகுறித்த புகார் தொடர்பாக 882 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. அதன் பிறகுதான் அந்த எப்ஐஆரை தனி நீதிபதி ரத்து செய்தார். அந்த எப்ஐஆரே ரத்தாகிவிட்ட நிலையில், சிபிஐ விசாரணை கோருவதற்கே முகாந்திரம் இல்லை’’ என வாதிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக சிபிஐ தரப்பை எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரும் திமுகவின் கூடுதல் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, பிரதான வழக்கு விசாரணையை பிப்ரவரி 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x