Published : 22 Jan 2020 10:29 AM
Last Updated : 22 Jan 2020 10:29 AM

சமூக நீதியைக் காக்க 2021-ம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

சமூக நீதியைக் காக்க 2021-ம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (ஜன.22) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். பாமகவால் எழுப்பப்பட்ட இக்கோரிக்கைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவில் முழுமையான சமூக நீதியை உறுதி செய்ய முடியாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை மாதமே பாமக வலியுறுத்தியிருந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவையிலும், 11-ம் தேதி ஒடிசா அமைச்சரவைக் கூட்டத்திலும் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹரியாணா, அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பாமகவின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அகிலேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வது தவிர்க்க முடியாதது ஆகும். பாமக உள்ளிட்ட கட்சிகள் எழுப்பும் கோரிக்கைகள் ஒருபுறமிருக்க, இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய நிலைப்பாட்டின்படியே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியமாகும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்க நீதிபதி ரோகிணி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. குறிப்பிட்ட சாதிகள் அடங்கிய ஒவ்வொரு தொகுப்புக்குமான இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பே சாதிவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென பாமக வலியுறுத்தியது. இதற்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிய அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், அது தொடர்பான மனுவை 2008-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் நேரில் வழங்கினார். பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்டபோது லாலு பிரசாத், சரத் யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர்.

அதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதாரக் கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய மத்திய அரசு நடத்தி மக்களை ஏமாற்றியது. அப்போது இழைக்கப்பட்ட துரோகத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018-ம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அத்தகைய கணக்கெடுப்புக்கும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கணக்கெடுப்பு ஆவணத்தில் பிற பிற்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிடும் பகுதியில் அவரது சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டால் போதுமானது.

இந்தியாவில் பின்தங்கிய மக்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு தான் சிறந்த ஆயுதம் எனும் சூழலில், அந்த ஆயுதத்தை செம்மையாகப் பயன்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரத் தொகுப்பை உருவாக்குவது அவசியமாகும்.

எனவே, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும். மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x