Published : 21 Jan 2020 09:58 PM
Last Updated : 21 Jan 2020 09:58 PM

இந்தக் காலத்தில் திரைப்படங்களா எடுக்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி சலிப்பு

எம்ஜிஆர் காலத்தில் வந்த படங்கள், பாடல்கள் இன்றைக்கு உள்ளதா? இப்போது படமா எடுக்கிறார்கள், பாடல்களா எழுதுகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் படத்துடன் தற்கால படங்களை ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

இன்றையதினம் நம்மையெல்லாம் ஆளாக்கிய எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா. இன்றைக்கு ஒரு சாதாரண மனிதன்கூட உயர்ந்த நிலைக்கு உருவாக்குவதற்கு காரணமாக, அடித்தளமாக விளங்கிய ஒப்பற்றத் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவிளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த காலத்திலே மிட்டா, மிராசுதார், தொழிலதிபர்கள் தான் பதவிக்கு வர முடியும் என்ற நிலையை மாற்றி, அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காக எம்.ஜி.ஆர் சாதாரண தொண்டன்கூட அமைச்சராக முடியும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியும், சட்டமன்ற உறுப்பினராக முடியும் என்ற ஒரு நிலையை உருவாக்கிச் சென்றார்.

அதனாலேதான் நான் உட்பட, மேடையிலே வீற்றிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஒன்றியச் சேர்மன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அத்தனைபேரும் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதர் இருந்த காரணத்தினாலே நமக்கு இந்த பதவி கிடைத்திருக்கின்றது. சாதாரண மனிதனையும் உயர்ந்த நிலைக்கு உருவாக்கி அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட ஒரே மனிதர் எம்.ஜி.ஆர்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரரும், மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் என்று தான் பாடிய பாடலுக்கு தானே இலக்கணமானவர் எம்.ஜி.ஆர் . அற்புதமான பாடலைப் பாடி அவரே அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். 1917-ஆம் ஆண்டு பிறந்து, இளம் வயதிலேயே கல்வியை தொடர முடியாமல் நாடகக் கம்பெனியில் தன்னை இணைத்துக் கொண்டு சிறு வயதில் கடுமையான பசியில் வாட்டப்பட்டு, கடினமான வாழ்க்கை வாழ்ந்த தலைவர் நம்முடைய எம்.ஜி.ஆர் .

ஆகவே தான் அவர் ஒவ்வொரு படத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். இன்றைக்கு எத்தனையோ திரைப்படங்கள் வருகின்றன, எந்தத் திரைப்படமாவது உயிரோட்டமுள்ள திரைப்படமாக இருக்கிறதா? இல்லை. ஆனால், அப்பொழுது அண்ணா எம்.ஜி.ஆரைப் பார்த்து, """"நீ முகம் காட்டினால் 30 இலட்சம் வாக்குகள் நிச்சயம்"" என்று சொன்னார்கள். அந்தளவிற்கு மக்கள் சக்தி படைத்த தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் 1972-ஆம் ஆண்டு திமுகவில் அவரை விலக்கியபொழுது அப்பொழுது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அதனை அஇஅதிமுகவாக உருவாக்கினார். ஆகவே, அன்று முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும், அண்ணா பெயரிலே இந்த இயக்கத்திற்கு பெயர் சூட்டினார்.

அண்ணா உருவத்தை நம்முடைய கழகக் கொடியிலே பொறித்தவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கு அதிமுக என்று சொன்னால் அண்ணா நினைவில் வருகின்ற அளவிற்கு அண்ணா மிகப்பெரிய மரியாதை, புகழ் சேர்த்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் தான் உண்டு.

அதேபோல, எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படங்கள் ஊருக்கு உழைப்பவன், நீதிக்குத் தலைவணங்கு, தாய்ச்சொல்லைத் தட்டாதே, அன்னமிட்ட கை, உழைக்கும் கரங்கள், தர்மம் தலைகாக்கும் என அருமையான தலைப்புள்ள படங்கள். இன்றைக்கு வரக்கூடிய படங்கள் ஏதாவது நமக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னென்னவோ தலைப்புள்ள படங்கள் வருகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கின்றபொழுது நாட்டு மக்களுக்கு தேசியப் பற்றை உருவாக்க வேண்டும், நாட்டை நல்வழிப்படுத்த வேண்டும், இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், ஆக்கபூர்வமான கருத்தை திரைப்படத்தின் மூலமாக விளக்குவார்.

பாடல்கள் மூலமாக விளக்குவார். அப்படிப்பட்ட உன்னதமான தலைவர் தான் எம்.ஜி.ஆர் அவர்கள். ""நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"" ""நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி"" ""சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"" ""நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"" இப்படி பல கருத்துள்ள அற்புதமான பாடல்களை அவர் படங்களிலே பாடியுள்ள பாடல்கள் அவர் இந்த மண்ணிலே இருந்து மறைந்தாலும் அவர் பாடிய பாடல் இன்றைக்கும் உயிரோட்டம் உள்ள பாடல்களாக, அறிவுபூர்வமான பாடல்களாக, தேசப்பற்றுள்ள பாடல்களாக, இளம் சமுதாயத்தை வளர்க்கின்ற பாடல்களாக, அழிவில்லாத பாடல்களாக இருந்து கொண்டிருக்கும் அற்புதங்களை படைத்த தலைவர் எம்.ஜி.ஆர்.

""புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழைகள் நமக்காக"" இந்தப் பாடல் மூலமாக. சமுதாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட மகான்களை நினைவு கூறுகிறார். மகான்கள் இந்த நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அந்த மாமனிதர்களுடைய புகழைப் பரப்புவதற்காக, அவர்கள் வழியிலே நடக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பாடலை தன்னுடைய திரைப்படங்கள் வாயிலாக நாட்டுக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர் .

""எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே"" எப்படிப்பட்ட தத்துவப் பாடல். ஆகவே, நாம் எதிர்காலத்தில் எப்படியிருக்க வேண்டும், பெற்றோர்கள் எப்படி வாழவேண்டும், எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அன்றைய காலகட்டத்திலே நமக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர் இன்றைக்கும் தான் தலைவர் இருக்கிறார்கள். படத்தைப் பார்த்தாலே பையன் கெட்டுப் போய் விடுவான், பையனை அந்தப் பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்ற படமாக இப்பொழுது வருகிறது.

அந்தக் காலத்தில் இருக்கும் திரைப்படமும், இன்றைக்கு இருக்கின்ற திரைப்படமும் எப்படி இருக்கின்றது என்று நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ""நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே"" "" இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி"" ""உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புதுமுறையில் உண்டாக்கும் கைகளே"" என்ற பாடல் மூலம் தொழிலாளியின் பெருமையையும் அவர்கள் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல ""ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்"" என்ற பாடல் மூலம் தனது மதச்சார்பின்மையை வலியுறுத்தியிருக்கிறார்.

தன் வாழ்நாள் முழுவதும் தன் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய ஒவ்வொரு பாடலும் தத்துவப் பாடல். இன்றைக்கு அவர் பிறந்தநாள் விழாவிலே இதையெல்லாம் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் இதை நான் இங்கு தெரிவிக்கின்றேன். அதேபோல ""நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்"" என்றும் ""தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் கருத்தான பல தொழில் பயில்வோம் ஊரில் கஞ்சியில்லை என்ற சொல்லினை போக்குவோம்"" இவ்வளவு அருமையான பாடல்கள் மூலமாக இன்றைக்கு ஒரு வழிகாட்டியாக, தேசப்பற்றுள்ளவராக, இந்த நாட்டின் மீது, தமிழக மக்கள் மீது அன்பு கொண்டவராக, நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரே ஒரு மனிதர் எம்.ஜி.ஆர். "

"அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே இந்த நாளும் நமதே தர்மம் நம்மிடம் இருக்கும் வரையிலே நாளை நமதே இந்த நாளும் நமதே"" இந்தத் தமிழகமும் நமதே. ஆகவே, எம்.ஜி.ஆர் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்த மாபெரும் ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு, சிறப்போடு நாம் இன்றைக்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்”.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x