Published : 21 Jan 2020 08:39 AM
Last Updated : 21 Jan 2020 08:39 AM

அரசுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக கோரிய விஜயகாந்த் தரப்புக்கு கண்டனம்: நேரத்தை வீணடிப்பதாக நீதிமன்றம் கருத்து

தனக்கு எதிரான அவதூறு வழக்கில் அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்பு தெரிவித்ததற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், அபராதம் விதிக்கப்போவதாகவும் எச்சரித்தது. இது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என விமர்சித்த நீதிபதிகள், பின்னர் வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

கடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதையடுத்து அவர் மீது தமிழக அரசு தரப்பில் தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அவதூறு வழக்கு நிமித்தம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது விஜயகாந்த் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர், ‘‘அவதூறுவழக்குகள் தொடர்பான சட்டப்பிரிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளதால் இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ எனக் கோரினார்.

நீதிபதிகள் ஆட்சேபம்

அதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது:

இந்த மனுவில் அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டு தற்போது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி கோருவது என்பது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது. இதற்கு அபராதம் விதிக்கலாம். அதேபோல எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்களும் அவதூறு வழக்கு தொடருவதற்கு முகாந்திரமிக்கதாகவே உள்ளன. அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது உகந்த இடமில்லை.

அபராதம் விதிக்கவில்லை

இந்த வழக்கை தாக்கல் செய்யும்போதே அனைத்து விவரங்களையும் பரிசோதித்தபிறகு தானே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொண்டதால் இந்த வழக்கில் அபராதம் விதிக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது. இவ்வாறு மனுதாரரான விஜயகாந்த் தரப்பை நீதிபதிகள் எச்சரித்தனர்.

பின்னர் வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x