Published : 07 Aug 2015 08:50 AM
Last Updated : 07 Aug 2015 08:50 AM

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்: கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரிக்கை

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கீழ்ப்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து 6 மாணவிகள் உட்பட 15 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப் பட்ட மாணவ, மாணவிகளை விடுவிக்கக் கோரி, பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய மாணவர் பெருமன்றம் நிர்வாகிகள் தலைமையில் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரிக்கு வெளியே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போலீஸாரை கண்டித்து மாணவர்கள் கோஷங் களை எழுப்பினர். சில மாணவர்கள் போலீஸார் மீது கற்களை வீசினர். இதனால் போலீஸாருக்கும், மாண வர்களுக்கும் மீண்டும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் கேட்டை உள்பக்கமாக பூட்டினர்.

கல்லூரி வளாகத்துக்குள் போலீ ஸார் வரக்கூடாது. கைது செய்யப் பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். பச்சையப்பன் கல்லூரி முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ள தால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி போராட்டம்

சென்னை கேகே நகர் விஜயராகவாபுரம் ராஜமன்னார் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 100 பேர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அவர்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

மதுவிலக்கு கோரி போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மதுபானக் கடைகளை முற்றுகை யிடுவது மற்றும் சூறையாடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வாழப்பாடியை அடுத்த புதுப் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில், பணியில் இருந்த ஊழியர் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x