Published : 17 Jan 2020 02:18 PM
Last Updated : 17 Jan 2020 02:18 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிக்காமல் சீறிய விஐபி காளைகள்: களத்தில் நின்றாடி கவனம் ஈர்த்த சின்னக் கொம்பன்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளைகள் களத்தில் ஆடிய ஆட்டம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8.35 மணிக்கு தொடங்கியது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட்டு வருகின்றனர். போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு நடத்துகிறது.

இன்றைய போட்டியில் மொத்தம் 700 காளைகள் களமிறக்கப்படுகின்றன. களத்தில் காளைகளைக் காண 855 மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு சுற்றிலும் 75 வீரர்கள் களமிறக்கப்பட மதியம் 12 மணி நிலவரப்படி 230 காளைகள் களம் கண்டிருந்தன.

நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி கால அவகாசம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்ட நிலையில். இன்றைய தினமும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாடுபிடி வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிக்காத சின்னக் கொம்பன்..

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ ஆகியோரின் காளைகள் இறங்கின. ஆனால் அவற்றை யாராலும் பிடிக்க முடியவில்லை.

சின்னக் கொம்பன் காளையுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் - படம் அமைச்சரின் ட்விட்டர் பக்கம்

குறிப்பாக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சின்னக் கொம்பன், கருப்புக் கொம்பன், வெள்ளைக் கொம்பன் ஆகிய காளைகள் களத்தில் நின்றாடின. சின்னக் கொம்பன் சீறிப் பாய்ந்தபோது வீரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சின்னக் கொம்பன் களமாடிய வீடியோ ட்விட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இவை தவிர மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, திண்டுக்கல்லைச் சேர்ந்த காவல் அதிகாரி மாணிக்கவேல் ஆகியோரின் காளைகளும் களம் கண்டன. அவற்றையும் யாரும் பிடிக்க இயலவில்லை.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வளர்க்கும் காளை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் யார் கையிலும் சிக்காமல் சீறிப் பாய்ந்து சென்றது.

மதுரை பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த காளையாக தேர்வான ராவணன் என்பவரின் காளை இன்று அலங்காநல்லூரிலும் யார் கையிலும் சிக்காமல் சிறப்பாக விளையாடியது. ராவணனின் காளைக்கு நேற்று ரூ1 லட்சம் மதிப்புள்ள காங்கேயம் பசு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x