Published : 15 Aug 2015 11:04 AM
Last Updated : 15 Aug 2015 11:04 AM

இசை ஆர்வலர்கள் - ‘தி இந்து’ இணைந்து ‘மதுரத்வனி’ - இந்திய பாரம்பரிய இசை விழா சிங்கப்பூரில் 3 நாட்கள் நடக்கிறது: பிரபல கர்னாடக, இந்துஸ்தானி கலைஞர்கள் பங்கேற்பு

இந்திய பாரம்பரிய இசையை தெற்கு ஆசியாவில் அறிமுகப்படுத்தும் வகையிலும், இந்திய இசை மையமாக சிங்கப்பூரை உருவாக்கும் விதமாகவும் நடத்தப்படும் ‘மதுரத்வனி’ இசை விழா ‘தி இந்து’ ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வரும் 28-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கின்றன. இதில் பிரபல கர்னாடக, இந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

மறைந்த இசை மேதை ஜி.என்.பாலசுப்ரமணியம் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி ‘மதுரத்வனி’ இசைவிழா 2010-ல் தொடங்கப்பட்டது. சங்கீத கலாநிதி மதுரை டி.என்.சேஷகோபாலன், பத்மபூஷன் சுதா ரகுநாதன் ஆகியோரது இசையில் சிங்கப்பூரில் தனது முதல் பதிப்பை தொடங்கியது மதுரத்வனி இசை விழா. முதல் ஆண்டிலேயே சிங்கப்பூர், மலேசியா மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது.

தற்போது நான்காவது மதுரத்வனி இசைவிழா நடத்தப்படுகிறது. தெற்கு ஆசியாவில் இந்திய பாரம்பரிய இசையை பிரபலப்படுத்துவதும், தெற்கு ஆசியாவில் உள்ள இந்தியர்களுக்கும் மற்றவர் களுக்கும் இந்திய பாரம்பரிய இசை மையமாக சிங்கப்பூரை உருவாக்குவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.

கர்னாடக இசைப் பாடகர் வி.சங்கர்நாராயணன், ஆலோசகர் வனிதாசங்கர், செயற்குழு உறுப்பினர் பாலாசங்கர் உள்ளிட்ட இசை ஆர்வலர்களுடன் இணைந்து ‘தி இந்து’ நாளிதழ் இந்த இசைவிழாவை நடத்துகிறது.

சிங்கப்பூரில் மதுரத்வனி இசை விழா வரும் 28-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். 28-ம் தேதி பிரபல கர்னாடக இசைப் பாடகர் அபிஷேக் ரகுராமின் கச்சேரியுடன் விழா தொடங்குகிறது. மறுநாள் 29-ம் தேதி இந்துஸ்தானி பாடகர் சஞ்சீவ் அபயங்கர், கர்னாடக இசைப் பாடகர் வி.சங்கர் நாராயணனின் ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரி நடக்கவுள்ளது. நிறைவு நாளான 30-ம் தேதி இசையுடன் கூடிய நிகழ்த்து கலை அரங்கேறுகிறது. இதில் நட்பின் பல பரிமாணங்களை இசை மூலம் ஆராயும் ‘மித்ரா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாடக இயக்குநர் மற்றும் ஆர்வலர் டாக்டர் கவுரி ராம்நாராயண், பாடகர் பாரதி ராமசுப்பன் உள்ளிட்டோர் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்த வுள்ளனர். தொடர்ந்து காயத்ரி வெங்கடராகவனின் இசைக் கச்சேரி நடக்கிறது.

இசை நிகழ்ச்சி மட்டுமின்றி, வேறு சில புதிய அம்சங்களும் இந்த ஆண்டு மதுரத்வனி விழாவில் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டுமுதல், இசை விழா நடக்கும் அரங்கையும் புதுவிதமாக அலங்கரிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தாய்நாட்டை விட்டு பல மைல் தொலைவில் வசிக்கும் தமிழர்களுக்கு சென்னையில் இருக்கும் உணர்வை ஏற் படுத்துவதற்காக, ‘ஃப்ளேவர்ஸ் ஆஃப் சென்னை’ என்ற கருத்தில் சென்னையை நினைவூட்டுவதுபோல அரங்கம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x