Published : 11 Jan 2020 07:06 PM
Last Updated : 11 Jan 2020 07:06 PM

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு திமுக சார்பில் 5 லட்ச ரூபாய் நிதி: ஸ்டாலின் அறிவிப்பு 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த ஜன. 6-ம் தேதி இரவு 8 மணி முதல் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் காவல் பணியில இருந்தார். இரவு 9.30 மணியளவில் அங்கு வந்த இருநபர்கள் வில்சனை, கைத்துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் திமுக சார்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்

“எனது கணவர் குடும்பத்தைவிட போலீஸ் துறையையே அதிகம் நேசித்தவர்” என்று உயிரிழந்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி அளித்துள்ள பேட்டி மிகுந்த மன வேதனையைத் தருகிறது. தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மோசமான வாய்ப்பாகும்.

எனினும் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறி, அதிமுக ஆட்சியினர் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்களோ இல்லையோ, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வில்சன் கொல்லப்பட்ட இந்த வழக்கில் விரைந்து விசாரணையை முடித்து- குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்று காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

சோதனைச் சாவடிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி - அங்கு பணியில் இருப்போருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உடனடியாக எடுத்திட வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x