Published : 10 Jan 2020 01:51 PM
Last Updated : 10 Jan 2020 01:51 PM

ஸ்டாலின், ஓபிஎஸ்ஸுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம்: வைகோ, வைரமுத்து கண்டனம்

ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், ஸ்டாலின் இருவருக்குமான இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொண்டதற்கு வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

“தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சகோதரர் மு.க.ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு விலக்கிக்கொண்டு இருப்பது தவறான நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா இலட்சியங்களுக்கு எதிராக, திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலின் சரியான எதிர்ப்பைக் காட்டி வருகிறார். மக்கள் செல்வாக்கு அவருக்கு நாளும் அதிகரித்து வருகிறது.

தந்தை பெரியார் சிலையை உடைப்பது போன்ற கேடான செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது. அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் கண்டனங்கள்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கவிஞர் வைரமுத்துவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவு:

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உச்சகட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது.
ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன்”.

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x