Published : 07 Aug 2015 03:12 PM
Last Updated : 07 Aug 2015 03:12 PM

தலைவர்கள், முகநூல் நண்பர்களுக்கு நன்றி: விஜயகாந்த்

தேமுதிக நடத்திய மதுவிலக்குப் போராட்டத்துக்கு ஆதரவும், அரசுக்குக் கண்டனமும் தெரிவித்த கட்சித் தலைவர்கள் மற்றும் முகநுல் நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, ஜனநாயக முறைப்படி அகிம்சை வழி போராட்டம் நடத்தியது. அமைதி வழியில் போராட்டம் நடத்திய தேமுதிக தொண்டர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக, சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

தேமுதிகவின் அறவழி போராட்டத்தை ஆதரித்து, அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, நேரில்வந்து ஆதரவும், அரசுக்கு கண்டனமும் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், போராட்டத்திற்கு ஆதரவும், அரசுக்கு கண்டனமும் அறிக்கை வாயிலாக தெரிவித்த பிஜேபி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக பொது செயலாளர் வைகோ, சி.பி.எம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, ஐஜேகே செயல் தலைவர் ரவி, முகநூலில் ஆதரவும், அரசுக்கு கண்டனமும் தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைப்புகள், முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு மாபெரும் வெற்றிப் போராட்டமாக மாற்றி, காவல்துறையின் அத்துமீறல்களுக்கு அஞ்சிடாமலும், இறுதி வரை போராட்டக்களத்தில் இணைந்திருந்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், மகளிர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிகவின் இதுபோன்ற அறப்போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x